தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 3 அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் அதிரடியாகக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி அணியைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் நேற்று தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் மூவரும் உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சபாநாயகரிடம் ஈபிஎஸ் தரப்பு மனு:
இந்தச் சூழ்நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் முக்கியக் கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் அதிமுகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ராஜினாமாவை ஏற்க எதிர்ப்பு
மேலும், தவெக-வில் இணைந்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஏற்றுக் கொண்டதற்கு அந்தக் கடிதத்தில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி மாறி வாக்களித்ததாக ஏற்கனவே புகாருக்கு உள்ளானவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் எப்படி அவசர அவசரமாக ஏற்கலாம்?” என்று எடப்பாடி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. எனவே, அந்த 3 அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சபாநாயகரிடம் அதிமுக தரப்பில் பலமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அதிரடித் திருப்பம் காரணமாகத் தமிழக அரசியல் களத்தில், குறிப்பாகச் சட்டமன்ற விவகாரங்களில் பரபரப்பு மேலும் தொற்றிக்கொண்டுள்ளது.
இந்நிலையில் இன்று அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார்.
ஆனால் இசக்கி சுப்பையாவின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் இசக்கி சுப்பையா கைப்பட கடிதம் எழுதி கொடுத்த நிலையில் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.









