விஜய்யின் இலவசங்கள் அறிவிப்பு குறித்து எடப்பாடி கருத்து

Published On:

| By Pandeeswari Gurusamy

EPS

இலவசங்களை தொடர்ந்து விமர்சித்து வந்த விஜய் இலவசங்களை அறிவித்து இருப்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உலக மகளிர் தின விழாவையொட்டி, சேலம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக மகளிர் அணி சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, 40 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி வழங்கினார். மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மகளிர் உரிமைத் தொகையை ரூ.1,000-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்துவது குறித்து நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன். அதையே முதலமைச்சர் ஸ்டாலினும் அறிவித்துள்ளார். ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் தங்கள் விருப்பப்படி தேர்தல் அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்” என்றார்.

அப்போது, இலவசங்கள் குறித்து விமர்சித்து வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தற்போது இலவசத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஒவ்வொரு கட்சித் தலைவரும் தங்கள் விருப்பப்படி தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர். அதனடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தக் கேள்வியை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்” என்று பதிலளித்தார்.

ADVERTISEMENT

மேலும் பேசிய அவர், “அதிமுக சார்பில் ஏற்கனவே பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்சியும் தேர்தல் நேரத்தில் தங்கள் தலைமையின் ஆலோசனையின்படி அறிவிப்புகளை வெளியிடுகின்றன. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, 5 லட்சம் பேருக்கு ரூ.25,000 மானியம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share