எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று (ஜனவரி 31) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 2,559 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலான 49 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 13 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 28 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 15,453 பயனாளிகளுக்கு 205 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வீரமங்கை வேலுநாச்சியார் – அவரது மகள் வெள்ளச்சி நாச்சியர், மருது சகோதரர்கள் என விடுதலைக்காக போராடிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளை குறிப்பிட்டு புகழாரம் சூட்டினார்.
அண்ணன் ப.சிதம்பரம்
மேலும் அவர், “முன்னாள் ஒன்றியத்தின் அமைச்சர் மூத்த காங்கிரஸ் தலைவருமான அண்ணன் சிதம்பரம் இங்கே பேசினார். திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். அப்போது அண்ணன் சிதம்பரம் என்ன கருத்து சொல்கிறார் என்பதை நான் கூர்ந்து கவனிப்பேன்.
காரணம், பல்லாண்டு கால அனுபவம் வாய்ந்த அவரது பாராட்டை நான் முக்கியமாக கருதுவேன். அண்ணன் சிதம்பரம் ஒட்டுமொத்தமாக நாட்டிற்காக சிந்தித்தாலும், என்னதான் இருந்தாலும், சிவகங்கைக்காக கூடுதலாக, அக்கறையோடு சிந்திப்பார்; செயல்படுவார் என்பதற்கு இன்று திறந்து வைத்திருக்கக்கூடிய இரண்டு கல்லூரிகள் தான் உதாரணம்” என்றார்.
தொடர்ந்து திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், “ அடுத்தும், நம்முடைய திராவிட மாடல் ஆட்சிதான்! அண்ணன் சொன்னாரே, 2021-ல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒரு வாரத்தில் வந்தோம்; கோரிக்கை வைத்தோம் – அதற்கென்ன செய்துவிடலாம் என்று சொல்லி, அதை நிறைவேற்றியிருக்கிறார் என்று பெருமையோடு சொன்னார். அடுத்து வருவேன் என்று சொன்னார் – வரத்தான் போகிறீர்கள். அதில் என்ன சந்தேகம்!
ஆட்சி அமைந்ததும், வரிசையாக திறப்புவிழா காண இருக்கின்ற பல பணிகளுக்கும் நான் இப்போதே அடிக்கல் நாட்டியிருக்கிறேன்! மீண்டும் சிவகங்கைக்கு வந்து நிச்சயம் அதையெல்லாம் திறந்து வைப்பேன்.
நம்முடைய அரசின் திட்டமிட்ட செயல்பாடுகளால், தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது என்று சொன்னால், அது நான் சொல்லுகின்ற கற்பனை புள்ளிவிவரங்கள் இல்லை. அவை அனைத்தும் ஒன்றிய அரசு சொல்லுகின்ற புள்ளிவிவரங்கள்தான். அவர்கள் அறிக்கையை மேற்கோள் காட்டித்தான் சொல்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியை விமர்சிக்கின்ற ஆளுநர் ஒன்றிய அரசைத்தான் கேள்வி கேட்கவேண்டும். அதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை. தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் தமிழ்நாடு வளரவேண்டும் என்று பேசி இருக்கிறார்.
தமிழகத்தை பாராட்டிய மத்திய அரசு
தேர்தலுக்காக பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை எல்லாம் பேசிவிட்டு சென்றிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை வெளியாகி இருக்கிறது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டுக்கு முன்பாக இந்த அறிக்கை வந்திருக்கிறது. அதிலும், தமிழ்நாட்டை மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்கள்.
புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேம்படுத்தி இருப்பதாக ஒன்றிய அரசு பாராட்டி இருக்கிறது. உற்பத்தித் துறை வேலை வாய்ப்பில், தமிழ்நாடு முதலிடம் என்று ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை பாராட்டுகிறது.
“பெண்களுக்கான வேலை வாய்ப்பைப் பெருக்கும் திட்டங்களை தமிழ்நாடு தீட்டியிருக்கிறது, இது மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி” என்று பெருமையாக சொல்லியிருக்கிறார்கள். இந்த அறிக்கையை பிரதமரும், ஆளுநரும் படிக்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
“தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகள் வேறு மாநிலத்திற்கு சென்றுவிட்டது” என்று ஆளுநர் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில்தான் ஒன்றிய அரசின் அறிக்கை, தமிழ்நாட்டை இன்றைக்கு பாராட்டியிருக்கிறது.
சிவகங்கை கிராமங்கள் நிறைந்த மாவட்டம்! உங்களிடம் ஒரு முக்கியமான விசயத்தைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வந்த மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலை திட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு காலி செய்துவிட்டு வேறு பெயரில் புது திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
மகாத்மா காந்தியையும் பிடிக்காது மக்களையும் பிடிக்காது
நீங்கள் எல்லோருமே கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களுக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது! மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது! அதனால்தான் இப்படி செய்கிறார்கள். இதை எதிர்த்து தி.மு.க. சார்பில், காங்கிரஸ் கட்சியின் சார்பில், ஏன் பல்வேறு கட்சிகளின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறோம்.
நாடாளுமன்றத்தில் நம்முடைய கூட்டணி எம்.பி.க்கள் தீவிரமாக எதிர்த்தார்கள். இப்போது கொண்டு வந்திருக்கின்ற புதிய திட்டத்தைப் பற்றி, குடியரசுத் தலைவர் உரையை முன்வைத்து, முன்னாள் நிதியமைச்சர் அண்ணன் சிதம்பரம் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியிருந்தார்.
குடியரசுத் தலைவர் உரை என்றால், அது ஆளும் பா.ஜ.க. அரசின் உரைதான்! அவர்களை நோக்கித்தான் இந்த கேள்விகள். “ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற 100 நாள் திட்டத்திலேயே 50 நாள் கூட ஒன்றிய பா.ஜ.க. அரசு – ஒழுங்காக வேலை வழங்குவது இல்லை. ஏனென்றால், அதற்கான நிதியை ஒழுங்காக விடுவிப்பது இல்லை.
இந்த நிலையில், 50 நாள் எப்படி மேஜிக் போன்று 125 நாட்களாக உயரும்? ஒன்றிய அரசு இந்தத் திட்டத்திற்கு இரண்டரை மடங்கு கூடுதல் நிதியை அளிக்க தயாராக இருக்கிறார்களா? 125 நாள் அப்படி என்று ஒன்றிய பா.ஜ.க அரசு சொல்வதற்கு எந்த கேரண்டியும் கொடுக்கவில்லை! அது வெறும் மாயைதான். சொல்வதுதான் சொல்கிறீர்கள். அதை எதற்கு வெறும் 125 நாளோடு நிறுத்திவிட்டீர்கள்? 125 நாளுக்கு பதிலாக 365 நாளும் வேலை என்று கூட புரூடா விடலாமே!” என்று அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் ஆழமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
100 நாள் வேலை திட்டம் என்று சொல்லுகின்ற மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரை நாம் கணக்கிட்டுப் பார்த்தால், 65 இலட்சம் குடும்பங்கள் பயனடைந்திருக்கிறார்கள். ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடியிலிருந்து 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை கிராமப்புற மக்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது அவர்கள் கொண்டு வந்திருக்கின்ற புதிய திட்டத்தில் இதில் பாதி வருவதே சந்தேகம்தான். வேலை நாட்களையும் நாம் முடிவு செய்ய முடியாது. மேலே இருந்து அவர்கள் தான் முடிவு செய்வார்களாம். போதாக்குறைக்கு, இனி மாநிலங்கள் 40 விழுக்காடு நிதியை வழங்க வேண்டும் என்று வேறு புது திட்டத்தில் நம் மீது பெரிய தாக்குதலை தொடுத்திருக்கிறார்கள்.
ஒன்றிய பா.ஜ.க அரசு தன்னுடைய கடமையிலிருந்து நழுவி ஓடுகிறது; கிராமப்புற மக்களை மொத்தமாக கைகழுவி விடுகிறது. இந்த குறைபாடுகளை எல்லாம் சுட்டிக்காட்டி, இந்தத் திட்டத்தை உடனடியாக திரும்ப பெறவேண்டும். மறுபடியும், பழைய திட்டத்தை மகாத்மா காந்தி பெயரிலேயே தொடரவேண்டும் என்று சட்டமன்றத்தில் நாம் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறோம்.
மக்களின் குரலுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு கட்டாயம் செவிசாய்க்க வேண்டும்! இல்லையென்றால், மூன்று வேளாண் சட்டங்கள், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு போலவே, இதிலும், மக்கள் துணையுடன் உங்கள் முடிவை வாபஸ் பெற வைப்போம்!
ஈபிஎஸ் ஆட்சிக்கு வரப்போவதில்லை
தமிழ்நாட்டிற்காக குரல் கொடுக்க முடியாத பத்துத் தோல்வி பழனிசாமி, நம்முடைய அரசு இப்போது செய்து கொண்டிருக்கின்ற திட்டங்களை காப்பி அடித்தே புதிய வாக்குறுதிகள் என்று அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார். அவர் ஆட்சிக்கு வரப் போவதில்லை! அது வேறு விசயம். அப்புறம் ஏன் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஏற்கனவே அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த வாக்குறுதியையும் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அவர் நிறைவேற்றவில்லை.
2011 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னார்கள் தெரியுமா?
சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலைத் திட்டம் என்று சொன்னார்கள். செய்தார்களா?
தென் தமிழ்நாட்டில் ‘ஏரோ பார்க்’ என்று சொன்னார்களே… செய்தார்களா?
58 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்று சொன்னார்கள். அதைப் பற்றி வாயே திறக்காதவர்கள்தான் இப்போது அடுத்த செட் பொய் வாக்குறுதிகளுடன் வந்திருக்கிறார்கள்.
2016 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதையாவது பழனிசாமி அவர்களுக்கு நினைவில் இருக்கிறதா?
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் செல்ஃபோன் வழங்கப்படும் என்று சொன்னீர்களே. எங்கே அந்த ஃபோன்?
பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் இலவச ‘வை-ஃபை’ என்று சொன்னார்கள். பிறகு, அதைப் பற்றி பேச்சு மூச்சே இல்லை.
அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ‘அம்மா இரு சக்கர வாகன பழுது பார்க்கும் பயிற்சி மையம் உருவாக்கப்படும்’ என்று சொன்னார்கள். சொன்ன அவர்களுக்கே அது இப்போது மறந்துபோய்விட்டது.
அதிமுக ஆட்சியோ, பழனிசாமி அவர்களோ எப்போதுமே சொன்னதை செய்ய மாட்டார்கள் என்று மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், தி.மு.க. சொன்னதைச் செய்யும், செய்வதைத் தான் சொல்லும் என்று மக்களுக்குத் தெரியும்” என்று விமர்சித்தார்.
மேலும் அவர், “அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திக் காட்டியிருக்கிறோம். யாராலும் செய்யவே முடியாது என்று சொன்னார்கள். அதையும், 5 ஆண்டுகளுக்குள்ளே செய்து, மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று நிரூபித்திருக்கிறது நம்முடைய திராவிட மாடல் ஆட்சி! நாம் ஆட்சிக்கு வந்தபோது, அரசு ஊழியர்களுக்கு 17 விழுக்காடாக இருந்த அகவிலைப்படியை இப்போது 58 விழுக்காடு என்கின்ற அளவிற்கு உயர்த்தி வழங்கியிருக்கிறோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
நாம் சொல்லிவிட்டு செய்த திட்டங்களுக்கு இணையாக, சொல்லாமயே பல முத்திரைத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம்! அதுதான் பெரிய சாதனை!
இன்னும் பல கனவுத் திட்டங்கள் இருக்கிறது. அவற்றை நிறைவேற்றும் வாய்ப்பை திராவிட மாடல் 2.0-ல் தமிழ்நாட்டு மக்களான நீங்கள் எனக்கு வழங்குவீர்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை தான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும்போது உங்கள் முகங்களில் நான் பார்க்கிறேன்!
மக்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி… தமிழ்நாட்டின் வளர்ச்சியே என் மகிழ்ச்சி… வெல்வோம் ஒன்றாக” என்றார்.
