100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியத்தை கடந்த இரண்டு மாதங்களாக அரசு கொடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 22) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை, இந்த ஸ்டாலின் மாடல் அரசு இன்றுவரை வழங்கவில்லை. புத்தாண்டு பிறந்த ஜனவரி மாதத்தில், பல மாவட்டங்களில் இந்த ஸ்டாலின் மாடல் அரசால் இதுவரை 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படவில்லை என்றும் செய்திகள் வருகின்றன” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “ ஒன்றிய பாஜக அரசிற்கு ஒரு பாதிப்பென்றால் ஓடிவந்து குறுக்கே விழுந்து அதை மடைமாற்றம் செய்வதே எதிர்கட்சித்தலைவர் பழனிசாமியின் கடமை என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார்.

100 நாள் வேலைத் திட்டம் என்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு.
இந்த நயவஞ்சக செயலை கண்டித்து முதலமைச்சர் உடனடியாக தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய MGNREGS நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திப் பொங்கலுக்கு முன்பே 13.01.2025 அன்று பிரதமருக்குக் கடிதம் எழுதி இருந்தார். இதை ஆதரித்து தமிழ்நாட்டு மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டிய பழனிசாமி , தனது குரலை அவதூறு பரப்ப மட்டுமே பயன்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது.
ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருக்க வேண்டுமல்லவா?
எதற்கெடுத்தாலும் செய்தித்தாளிலே படித்தேன், டிவியைப் பார்த்து தெரிந்து கொண்டேன் எனக் கூறும் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒன்றிய பாஜக அரசு நமக்கு நிதி ஒதுக்காதது பற்றித் தெரியாதா?.
புயல் வெள்ள நிவாரணம், கல்வி நிதி , 100 நாள் வேலைக்கான நிதி ஆகியவற்றை ஒதுக்காமல் தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைத்துவரும் பாஜக அரசோடு மறைமுகக் கூட்டணி வைத்துக் கொண்டு , ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது பேச முடியாமல் வாய் மூடி இருப்பது ஏன்?
தனது இயலாமையை மறைக்கவே மக்களின் நலனில் அக்கறை கொண்டு அனுதினமும் செயல்பட்டுவரும் திராவிட மாடல் ஆட்சியின் மீது அவதூறு பரப்புவதையே அவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்” என்று விமர்சித்துள்ளார்.
முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடந்த ஜனவரி 13ஆம் தேதி கடிதம் எழுதினார்.
அதில், 100 நாள் வேலை திட்டத்திற்கான ரூ.1,056 கோடி ஊதிய நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
