சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சபைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், பேச விடாமல் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும், சபாநாயகர் அப்பாவுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேரவையில் பேசிய சபாநாயகர், ”நீங்கள் பேசுவதற்கு நேரம் தருகிறேன். உங்கள் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறேன்.
நீங்கள் பேசுவது எதுவும் அவைக்குறிப்பில் வராது. சட்டப்பேரவை விதி என்ன சொல்கிறதோ, அதைத்தான் நான் சொல்லப் போகிறேன்.
சபையை நடத்தவிடாமல் வேண்டுமென்றே கலகம் செய்ய நினைக்கிறீர்களா? கேள்வி நேரம் முடிந்தபிறகே உங்கள் குற்றச்சாட்டுகளை சொல்லவேண்டும்.
அவை மாண்பை கெடுக்காதீர்கள். கலகம் செய்ய நினைக்காதீர்கள். அதை அனுமதிக்க மாட்டேன். கேள்வி நேரம் என்பது மக்கள் பிரச்சினை, அதற்கு நீங்கள் தடை ஏற்படுத்துகிறீர்கள்” என்றார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய அவை முன்னவரான துரைமுருகன், ” ‘பேரவைத் தலைவர் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்’ என்று கூறிவிட்டார்.
எனவே எதிர்க்கட்சித் தலைவர் பொறுமையாக இருந்து கேள்வி நேரம் முடிந்தபிறகே உங்கள் கோரிக்கை குறித்து பேசலாமே” என்றார்.
ஆனால் அதை ஏற்காத எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
”அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்கிறீர்கள், மக்கள் பிரச்சினையை பேச மறுக்கின்றீர்கள், விதிகளை மீறவேண்டாம்” என்றும் பலமுறை சபாநாயகர் அப்பாவு எச்சரித்தும் யாரும் இருக்கைகளில் அமரவில்லை.
எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன்வந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவை முன்னவர் துரைமுருகன், ”சபாநாயகர் எழுந்து நின்று பேசும்போது அவையில் இருப்பவர்கள் அமர்ந்து பொறுமை காப்பதே சிறந்தது. ஆனால் இவர்கள் யாரும் அதை மதிக்கவில்லை. எனவே கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
”இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை ஏற்கக்கூடாது என்பதற்காகவும், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை இவற்றுக்கெல்லாம் பயந்துதான் அமளியில் ஈடுபடுகிறீர்கள்” என்று சபாநாயகர் கூறினார். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பொறுமையிழந்த சபாநாயகர் அப்பாவு, சபைக்காவலர்களிடம், எடப்பாடி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றும்படி உத்தரவிட்டார்.
கலை.ரா