அதிமுக கூட்டணியில் சேருவது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 23) தெரிவித்துள்ளார். Edappadi says we are
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு இப்படி பல பிரச்சனைகளில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் திசைதிருப்புவதற்காக தான் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தி நாடகம் அரங்கேற்றியிருக்கிறார்.
டாஸ்மாக்கில் 1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் திமுக அரசில் ஊழல் நடைபெறும் என்பது நிரூபணமாகியுள்ளது. டாஸ்மாக் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது” என்றார்.
தொடர்ந்து, “சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று பாஜகவில் இருந்து உங்களுக்கு அழுத்தம் வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளதே” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “100 சதவிகிதம் அவர்களை கட்சியில் சேர்க்க மாட்டோம். அதிமுகவை பொறுத்தவரை மிகச்சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய இயக்கம். பின்னர் நாங்கள் ஏன் அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.
“ராஜ்யசபா சீட் தொடர்பாக பாமக உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களா?” என்ற கேள்விக்கு, “இன்னும் ராஜ்ய சபா தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. தேர்தல் குறித்த அறிவிப்பு வரும்போது, அதுகுறித்து சொல்கிறோம்” என்றார்.
“தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணியில் சேரப்போவதாக செய்திகள் வருகிறதே” என்ற கேள்விக்கு, “இதுதொடர்பாக அவரும் எங்களை அணுகவில்லை. நாங்களும் அவரிடம் கேட்கவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Edappadi says we are