வைஃபை ஆன் செய்ததும் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பற்றி ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு இன்ஸ்டாகிராமில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்து விட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஜனவரி 4 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கு விசாரணை காரணமாக அதிமுகவின் கட்சி பணிகள் தாமதம் ஆகின்றன என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும்போதும் தெரிவித்த நிலையிலும்... பல்வேறு காரணங்களால் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வருகிறது.
இந்த நிலையில் தான் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 4ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
அதிமுகவின் பொதுக்குழு கடந்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமியால்
கூட்டப்பட்டது செல்லாது என்பதை வலியுறுத்தி பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கும் மேல்முறையீடு தான் இந்த வழக்கு. கட்சி விதிப்படி பொதுக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை என்றும் நானே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றும் பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வருகிறார்.
அதே நேரம் டிசம்பர் 5ஆம் தேதி டெல்லியில் ஜி 20 ஆலோசனை கூட்டத்திற்காக அரசியல் கட்சி தலைவர்களை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அழைத்த போது எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக பொது செயலாளர் என்ற அடைமொழியை பயன்படுத்தி இருந்தது. இது பன்னீர் தரப்பை அதிர வைத்த நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்ற விவகார துறை அமைச்சகத்துக்கு பன்னீர் கடிதம் எழுதி இருந்தார்.
இந்த சூழலில் கடந்த வாரம் குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக வரலாற்று சிறப்பு மிகுந்த வெற்றி பெற்ற நிலையில் அக்கட்சியின் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு அகமதாபாத் சென்றார் ஓ. பன்னீர்செல்வம். அங்கே பாஜக தேசிய தலைவர் நட்டா மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்தித்து திரும்பினார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து தன் தரப்பு ஆதரவாளர்களை ஒன்றிய செயலாளர், நகரச் செயலாளர், வட்டச் செயலாளர், மாவட்ட செயலாளர், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் என நியமனம் செய்து வந்தார் பன்னீர்செல்வம். இந்த நியமனங்களின் தொடர்ச்சியாக வரும் டிசம்பர் 21ஆம் தேதி சென்னையில் தனியார் ஹோட்டலில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை பன்னீர்செல்வம் கூட்டி இருக்கிறார்.
அதாவது ஜனவரி 4 வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பு அதிமுக என்பது இரு பிரிவாக இருக்கிறது என்பதை உச்ச நீதிமன்றத்திடம் ஆதார ரீதியாக தெரிவிக்கும் வகையில் தனியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை பன்னீர்செல்வம் கூட்டி இருக்கிறார்.

இதில் மிக சாமர்த்தியமாக கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எம்ஜிஆர் நினைவு நாள், ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது பற்றி விவாதிக்கவும் அடுத்து பன்னீர்செல்வம் தரப்பு பொதுக்குழுவை கூட்டுவது பற்றி முக்கிய ஆலோசனை நடத்தவும் இருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும்போது அதிமுகவில் இரு அணிகள் இருப்பதை உறுதி செய்து அதற்கான ஆவணங்களையும் உச்சநீதிமன்றத்திடமும் அதன் பிறகு பொதுக்குழு நடத்தி தேர்தல் ஆணையத்திடமும் சமர்ப்பிப்பது தான் பண்ருட்டி ராமச்சந்திரன் யோசனைப்படி பன்னீர்செல்வம் வகுத்திருக்கும் திட்டம்.
இந்த நிலையில் இந்த தகவல் அறிந்த எடப்பாடி பழனிசாமி தனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்.
இந்த உத்திகள் ஒரு பக்கம் இருக்கும் நிலையில் கட்சியை தன் பிடிக்குள் அழுத்தமாக வைத்திருப்பதற்காக இன்னொரு பக்கம் பொங்கலுக்காக வேறு சில செயல் திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார் எடப்பாடி.
ஜெயலலிதா இருக்கும்போது சில பண்டிகை தினங்களை ஒட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைக் கழக பேச்சாளர்களுக்கு ரொக்கத் தொகை வழங்கப்படும். அதுவும் ஒரு கட்டத்தில் நின்று போனது.
இந்த நிலையில் இப்போது 234 தொகுதிகளிலும் அதிமுகவில் இருக்கும் அறுபது வயதுக்கு மேற்பட்ட சீனியர்கள் பட்டியலை தயாரிக்க சொல்லி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் வழியாக இந்த சீனியர்களை கண்டுபிடித்து பட்டியல் தயாரித்து அவர்களுக்கு தலா 5ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தருவதற்கும் திட்டமிட்டு இருக்கிறார் எடப்பாடி.
ஒரு தொகுதிக்கு 200 லிருந்து 250 பேர் வரை அதிமுக சீனியர்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் இவர்கள் பற்றிய பட்டியலை ஊர் ஊராக சென்று மாவட்ட செயலாளர்கள் தங்களது நிர்வாகிகளை வைத்து தயாரித்து வருகிறார்கள்.
தர்மபுரி மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. பி. அன்பழகன் தன் மாவட்டத்தில் இருக்கும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக இந்த சீனியர் லிஸ்ட்டை எடுத்து தலைமைக்கு அனுப்பி வைத்து விட்டார். இதே போல மற்ற மாவட்டங்களிலும் பட்டியல் தயாரிக்கப்பட்டு எடப்பாடிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
ஜனவரி முதல் வாரத்தில் இருந்து இவர்களுக்கான பட்டுவாடா தொடங்கும் என்கிறார்கள் சேலத்து வட்டாரத்தில்.
ஒரு பக்கம் பன்னீர்செல்வம் பொதுக்குழுவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில்.. இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி பொங்கலுக்காக அதிமுகவின் சீனியர்களை தேடி பயணித்துக் கொண்டிருக்கிறார்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்