சட்டப்பேரவையில் நேரடி ஒளிபரப்பு செய்து பேச வாய்ப்பு கொடுத்திருந்தால் கிழி கிழியென கிழித்திருப்பேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்கக் கோரி அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சட்டப்பேரவை மாண்பை குலைத்ததாக அதிமுக எம்.எல்.ஏ.க்களை பேரவை முடியும் வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (ஜூன் 27) சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு, தேமுதிக, நாம் தமிழர், புரட்சி பாரதம், இந்திய குடியரசுக் கட்சி, எஸ்.டி.பி.ஐ கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
போராட்டத்தின் இறுதியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சி மரணம் குறித்து சட்டப்பேரவையில் பேசும் போது எங்களை வெளியேற்றிவிட்டு முதல்வர் ஸ்டாலின் 15 நிமிடம் விவரிக்கிறார்.
கேள்வி நேரத்தின் போது நாங்கள் பேசினால் விதி, மரபுப்படிதான் பேரவை நடத்தப்படும் என்கிறார் சபாநாயகர். ஆனால் கேள்வி நேரத்தின் போது 15 நிமிடம் முதல்வர் பேசுகிறார். இது எந்த விதத்தில் நியாயம்.
ஆளும் கட்சிக்கு ஒரு நியாயம், எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயமா… இதுதான் நீதியா..
இந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் எதிர்கட்சிகளுக்கு பேச வாய்ப்பே கிடைக்கவில்லை. ஒவ்வொரு மானிய கோரிக்கையின் போது 10 நிமிடம்தான் கொடுக்கிறார்கள். இந்த 10 நிமிடத்தில் என்ன பேச முடியும்.
ஆனால் நாங்கள் ஆட்சியில் இருந்த போது எதிர்க்கட்சிகளுக்கு 40 நிமிடங்கள் வழங்குவோம்.
திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தலுக்கு முன்னதாக ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்றார். ஆனால் இன்று நிலைமை என்ன?
தற்போது 7 நாட்கள் தான் சட்டமன்றம் நடக்கிறது. ஒரு நாளைக்கு 5 துறை மானிய கோரிக்கைகள் எடுத்து விவாதிக்க வேண்டும் என்றால், அது எப்படி இருக்கும் என எண்ணி பார்க்க வேண்டும்.
சம்பிரதாயத்துக்காக இந்த மானிய கோரிக்கையை நடத்திகொண்டிருக்கின்றனர்” என்று ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கள்ளக்குறிச்சி மரணம் தொடர்பாக பேசிய எடப்பாடி பழனிசாமி, “இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 19ஆம் தேதி பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர், ஒருவர் வயிறு வலி காரணமாகவும், ஒருவர் வலிப்பு காரணமாகவும், ஒருவர் வயது முதிர்வு காரணமாகவும் உயிரிழந்துள்ளனர் என கூறினார். கள்ளச்சாராயம் குறித்து உயிரிழக்கவில்லை என்றார்.
வதந்திகளை நம்ப வேண்டாம்…. தவறான செய்திகளை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். இதனால் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்லவில்லை. இதுமட்டுமின்றி, அப்போது மூன்று பேர் வரை உயிரிழந்திருந்த நிலையில் துக்கம் விசாரிக்க வந்தவர்களும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துவிட்டனர்.
அதனால் தான் இவ்வளவு மரணம். இதற்கு அரசுதான் காரணம்.
இப்படிப்பட்ட ஒரு சம்பவம் குறித்து சட்டமன்றத்தில் பேச மறுக்கப்படுகிறது என்றால், இது ஜனநாயக படுகொலையாக பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் குரல்வலையை நசுக்குகிறார்கள்.
அதிமுக மக்களுக்கு சேவை செய்ய உருவாக்கப்பட்ட கட்சி. எப்போதும் எதற்கும் அஞ்சுவது கிடையாது. சட்டப்பேரவையில் ஒரு அமைச்சர் சொல்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் உள்ளே இருந்திருந்தால் கிழி கிழியென கிழித்திருப்பேன் என்கிறார்.
அவர் பேப்பரை வேண்டுமானால் கிழிக்கலாம். நான் எப்படி பேசுவேன் என்று உள்ளே வரும் பத்திரிகையாளர்களுக்கு தெரியும்.
நான் பேசுவதை எல்லாம் நேரடி ஒளிபரப்பு செய்திருந்தால், அவர் சொல்வது போல நான் கிழி கிழியென கிழித்திருப்பேன். வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள்” என குறிப்பிட்டார் எடப்பாடி பழனிசாமி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தேசிய விளையாட்டில் தங்கப்பதக்கம்… ஊக்கத்தொகையை உயர்த்திய உதயநிதி