அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று (நவம்பர் 27) விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,”அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இல்லை. அதனால் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.. நன்றி வணக்கம் என்று தெரிவித்துள்ளார்.
மதுரையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார். திருமண நிகழ்ச்சிகள் பங்கேற்றுவிட்டு மீண்டும் விமான நிலையம் செல்லும் முன் தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
தான் மட்டும் தான் இருப்பேன் என்று நினைத்தால் ஆண்டன் தண்டிப்பார் என செங்கோட்டையன் கூறியது குறித்த கேள்விக்கு, “அது அவருடைய கருத்து. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. உங்களுக்கும், எனக்கும் ஒரு கருத்து உள்ளது. கருத்து சுதந்திரம் உள்ளது. இது ஜனநாயக நாடு. ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். அவர் அனைத்திந்திய அண்ணா திமுகவில் இல்லை அவரைப் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை” என தெரிவித்தார்.
எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் செயல்பட்டு வந்த செங்கோட்டையன் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அக்கட்சியில் தொடர்ந்து இயங்கி வந்தார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராகவும் இயங்கி வந்தார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீதான கருத்து வேறுபாடு காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் இருந்து விலகி இருந்த செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகியவர்களை இணைக்க வேண்டும் என்று மனம் திறந்தார். இதையடுத்து அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டது.
தேவர் குரு பூஜையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை செங்கோட்டையன் சந்தித்து பேசிய நிலையில் அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அதிரடியாக நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
இதைத்தொடர்ந்து அதிமுகவில் குடும்ப அரசியல் நிலவுவதாகவும் கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் மகன், மைத்துனர், மருமகனின் தலையீடுகள் அதிகம் இருப்பதாகவும் பகிரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்தார் செங்கோட்டையன்.
இந்த நிலையில் தான் நேற்று தனது எம்எல் ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் இன்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி ஏற்படும் என்று எதிர்பார்ப்பில் இருந்தார் எடப்பாடி பழனிசாமி.
முன்னதாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் தவெக கட்சி கொடிகளுடன் சிலர் பங்கேற்றனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமையிலான கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும்.
அங்க பாருங்க.. கொடி பறக்குது.. பிள்ளையார் சுழி போட்டாங்க.. எழுச்சி ஆரவாரம்.. என்று தனது எதிர்பார்ப்பை வெளிப்படையாகவே அறிவித்திருந்தார். இந்நிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருப்பது அதிமுக தவெக கூட்டணியை கேள்விக்குறியாக்கி உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
