மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியமாக செயல்படுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 22) சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதியின்றி ஒரு செங்கல் கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது. கர்நாடகாவில் இந்த விஷயத்தில் அரசியல் செய்கிறார்கள்” என்று பேசினார்.
இதனை தொடர்ந்து அதிமுகவினர் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,
“உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டு தான் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே ஆணையம் மற்றும் குழுவின் பணிகள் என்பது
காவிரி நதிநீரை தேக்குதல், பகிர்மானம் செய்தல், முறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல்,
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவுடன் அணைகள் செயல்பாட்டை மேற்பார்வையிடுதல் மற்றும் அவற்றிலிருந்து நீரை பாசன தேவைகளுக்கு வழங்குதல்,
கர்நாடகா தமிழ்நாடு எல்லையில் தற்போது உள்ள பிலிகுண்டுலு அணையின் நீரின் அளவை கண்காணித்தல் மட்டுமே.
இவற்றை தவிர வேறு பணிகள் எதுவும் மேற்கொள்ள இந்த அமைப்புகளுக்கு அதிகாரம் இல்லை. புதிதாக மேகதாது அணை கட்ட விவாதிக்க இந்த ஆணையத்திற்கோ, குழுவிற்கோ எந்த அதிகாரமும் இல்லை.
அதனால் தான் அதிமுக அரசு இருக்கும் போது கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதத்தை ஆணையத்திடம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டது. அப்போது மேகதாது அணை குறித்து விவாதிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என்று என்று கடுமையாக எதிர்த்தோம்.
2018-ஆம் ஆண்டு மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக மத்திய நீர்வள கமிஷனுக்கு கர்நாடகா கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தை மத்திய நீர்வள கமிஷன் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பியது.
அப்போது தான் 5.12.2018 மத்திய நீர்வள கமிஷன் இயக்குனர் மீது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டதால் அவர் மீது வழக்கு தொடர்ந்தோம்.
இன்னும் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை தொடர்ந்ததினால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்கவோ, எந்தவித செயல்பாடுகளும் நடைபெறவில்லை. அதுவரை மேகதாது அணை கட்டும் முடிவு தடுத்து நிறுத்தப்பட்டது.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 1.2.2024-ஆம் தேதி ஆணையத்தின் வரையறுக்கப்பட்ட பணி வரம்பிற்கு அப்பாற்பட்டு மேகதாது அணை கட்டுவது பற்றி 28-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க அனுமதித்துள்ளனர்.
மேகதாது பற்றிய விவாதம் நமது எதிர்ப்பை மீறி செயல்பட்டிருந்தால், உடனடியாக தமிழகத்தை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அந்த கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்யவில்லை.
இப்போது ஆணையம் அதிகார வரம்பிற்கு சம்பந்தமில்லாத மேகதாது அணை கட்டுவது குறித்து மத்திய நீர்வளத்துறை கமிஷனுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதனை சட்டமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கவனத்திற்கு கொண்டு வந்தோம். 28-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் என்ன நடந்தது என்று இதுவரை அவர் பதிலளிக்கவில்லை.
கர்நாடக அரசு அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மேகதாது அணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளது. மேகதாது அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது என்று சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தால் இந்த அரசு சரியாக செயல்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் இந்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேகதாது அணை கட்டினால் மேட்டூர் அணை வறண்டு டெல்டா பாலைவனமாகும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியமாக செயல்பட்ட காரணத்தினால் தான் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் திமுக அரசு மீது கோபத்தில் உள்ளனர்” என்று எடப்பாடி தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இன்று ‘மழை’ கன்பார்ம்: வானிலை மையம் அறிவிப்பு
“சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல”: ஸ்டாலின்