திமுக ஆட்சி ஊழல் செய்வதில் முதன்மையாக உள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் திமுக, பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த 1,163 பேர் இன்று (ஜூலை 29) பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டது அதிமுக. எடப்பாடி தொகுதியில் பல குடும்பங்கள் வேளாண்மை, நெசவு தொழிலை நம்பியிருக்கிறார்கள். இந்த இரண்டு தொழில்களும் சிறப்பாக அமைய அதிமுக சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதியில் மட்டும் 11 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தையும் திமுக அரசு மூடிவிட்டார்கள். பழி வாங்கும் அரசாக திமுக உள்ளது. அதிமுக ஆட்சியில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் காரணமாக எடப்பாடி தொகுதியில் மட்டும் 84 பேருக்கு எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது. திமுக ஆட்சி ஊழல் செய்வதில் முதன்மையாக உள்ளது. இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் என்ன திட்டம் கொண்டு வந்தார்கள். தமிழகத்தில் பல முதலமைச்சர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இரட்டை வேடம் போடும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது.
ஊழல் செய்து சிறையில் உள்ள செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சராக உள்ளார். இதனை நாடே எள்ளி நகையாடுகிறது. செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து விடுவித்தால் மக்கள் பாராட்டுவார்கள். இல்லையென்றால் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள். செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்தால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற ஆபத்தில் அவரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்காமல் ஸ்டாலின் உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ரசிகர்களின் போராட்டம்…மீண்டும் இந்திய அணியில் சஞ்சு சாம்சன்
திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?