2026 சட்டமன்ற தேர்தலில் மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க பொதுமக்கள் தயாராகிவிட்டார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 4) தெரிவித்துள்ளார். Edappadi Palaniswami says aiadmk
சேலத்தில் இன்று மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எந்த பொதுக்கூட்டத்தில் பேசினாலும், திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என்று சொல்கிறார். அது உண்மையில்லை என்பதை இங்கே கூடியிருக்கும் கூட்டம் நிரூபித்து காட்டியிருக்கிறது.
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று கிராமத்தில் சொல்வார்கள். ஆகவே, இங்கு இணைந்தவர்கள் தான் அதற்கு சாட்சி. அதிமுக வலிமையாக இருக்கிறது. மக்கள் மத்தியில் செல்வாக்காக இருக்கிறோம் என்பதை நாம் நிரூபித்துக்கொண்டிருக்கிறோம். திமுக தேய்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.
நாடு சுதந்திரம் பெற்று, பல ஆண்டுகள் ஆனாலும், இன்றைக்கும் மன்னராட்சி வேண்டும், வாரிசு ஆட்சி வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். அதையெல்லாம் விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள்.
மீண்டும் தமிழகத்தில் மன்னராட்சி வர நாம் துணை நிற்க கூடாது. கலைஞர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அதிகாரத்திற்கு வருகிறார்கள். ஸ்டாலின், உதயநிதி அவர்களுக்கு பிறகு இன்பநிதி வருவார். இவர்கள் அனைவரின் பெயரிலும் நிதி இருக்கிறது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்ககூடிய தேர்தல் 2026 தேர்தலாக இருக்க வேண்டும். அப்போது தான் ஏழைகள் பிழைக்க முடியும்.
மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் நம்முடைய தலைவர்கள். அதனால் தான் இன்றைக்கு அதிமுகவை யாராலும் சீண்டிக்கூட பார்க்கமுடியவில்லை. இந்த கட்சியை யாராரோ முடக்கப்பார்த்தார்கள். ஆனால், அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.