நாங்கள் பாஜகவுக்கு அடிமையில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கோரணம்பட்டியில் இன்று (ஜூலை 21) நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பணிகள் எல்லாம் இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டன” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “ திமுகவில் பல ஆண்டுகளாக உழைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டார்கள். அண்ணன் துரைமுருகன் 65 ஆண்டுகாலம் திமுகவுக்காகப் பாடுபட்டவர். அவரையெல்லாம் முன்னிலைப்படுத்துவது கிடையாது.
ஆனால் ஸ்டாலின் மகன், கருணாநிதியின் பேரன் உதயநிதி எப்போது கட்சிக்கு வந்தார். அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வாரிசு அரசியல் நடக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் அங்குக் காவிரி நீர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிரச்சனை குறித்துப் பேசவில்லை. நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் தமிழ்நாடு உரிமைக்காகக் குரல் கொடுப்பதில்லை” என்று குறிப்பிட்டார்.
“எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு அடிமை என்று ஸ்டாலின் எப்போதும் சொல்கிறார். ஆனால் நாங்கள் யாருக்கும் அடிமையில்லை, நீங்கள் வேண்டுமானால் கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்றுவதற்காக அடிமையாக இருக்கலாம்” என்று கண்டனம் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
பிரியா
