“ஆடு நனையுதுனு ஓநாய் அழுதுச்சாம்” : தங்கம் தென்னரசுக்கு எடப்பாடி பதில்!

Published On:

| By Kavi

edappadi palaniswami reply to thangam thennarasu

சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். edappadi palaniswami reply to thangam thennarasu

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதமும் பதிலுரையும் நடந்து வருகிறது.

இன்று (மார்ச் 21) முன்னாள் அமைச்சர் தங்கமணி, மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

“தமிழகத்தில் 20 லட்சம் மாணவர்களுக்கு அரசு மடிக்கணினி திட்டத்தை அறிவித்து, அதற்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை கூட்டிக்கழித்து பார்த்தால் ஒரு லேப்டாப் 10 ஆயிரம் ரூபாய் தான் வருகிறது. 10 ஆயிரம் ரூபாயில் தரமான லேப்டாப் எப்படி வழங்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,  “இதெல்லாம் தங்கமணியின் மனக்கணக்கு. ஆண்டுக்கு 2000 கோடி  ஒதுக்கி தரமான லேப்டாப் வழங்கப்படும் என்று பதிலளித்திருந்தார்.

அதோடு,  ” மடிக்கணினி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி சற்று கவனக்குறைவாக இருந்து விட்டதை போல, உங்கள் மடியில் இருக்கக் கூடிய கனத்தை பறித்துக்கொள்ள நினைப்பவர்களிடம் இருந்தும் நீங்கள் அனைவரும் சற்று கவனமாக இருக்கும் வேண்டும்” என்று மறைமுகமாக பேசியிருந்தார்.

இந்தநிலையில் சட்டமன்ற கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,  “ பட்ஜெட் கணக்கை சரியாக செயல்படுத்துங்கள். எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம். எங்கள் மீது நீங்கள் கரிசனம் காட்ட தேவையில்லை.

எங்கள் கணக்கை எப்படி பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். இவர்கள் கடந்த காலங்களில் எப்படி இருந்தார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு , கூட்டணி வேறு. நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன்.  தேர்தல் வரும் போது எதிரிகளை வீழ்த்துவதற்காக கூட்டணி அமைக்கப்படும். கொள்கை என்பது நிரந்தரமானது.

கூட்டணி அப்படியில்லை, ஒவ்வொரு முறையும் மாறி மாறி அமையும். அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தவர்கள் திமுகவிலும், திமுகவுடன் கூட்டணியில் இருந்தவர்கள் அதிமுகவிலும் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.

ஒத்த கொள்கை கொண்ட கூட்டணி என்கிறார் முதல்வர். அதற்கு அவர்கள் ஒரே கட்சியாக இருந்துகொள்ளலாம். தனி தனி கட்சியாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.

கூட்டணி பற்றி திமுக பேசுகிறது. அறிவாலயத்தில், மேல் மாடியில் சிபிஐ விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. கீழ் மாடியில் காங்கிரஸுடன் கூட்டணி பேச்சு நடந்துகொண்டிருக்கிறது. இதுதான் அவர்களது நிலைமை.

அதிமுக என்றும் தன்மானத்தை இழக்காது. வேண்டுமென்றால் வேண்டும். வேண்டாமென்றால் வேண்டாம்.

திமுக அரசு அகற்றப்பட வேண்டும். அதுதான் எங்களது நிலைப்பாடு.  எமெர்ஜென்சி  கொண்டு வந்து, மிசா சட்டத்தில் சிறைச் சாலையில் அடைத்த காங்கிரஸ் கட்சியோடு நீங்கள் கூட்டணி வைத்திருக்கிறீர்கள். அந்த நிலைமை எங்களுக்கு வராது.

எங்கள் கட்சிக்குள் ஒருசில கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. எங்களுடைய கட்சி அலுவலகம் தாக்கப்படும், பாதுகாப்பு வேண்டும் என்று காவல் நிலையத்தில் அதிமுக நிர்வாகிகள் புகார் கொடுத்தபோது, பாதுகாப்பு கொடுக்கவில்லை.

குண்டர்கள் வந்து கட்சி அலுவலகத்தை தாக்கி உடைத்த போது, பூட்டிய அரசுதான் இந்த திமுக அரசாங்கம்.

அதிமுக விழித்துக்கொண்டது. விழித்துக்கொண்டவர்கள் எல்லாம் பிழைத்துக்கொள்வார்கள்” என்றார். edappadi palaniswami reply to thangam thennarasu

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share