கோபி பரப்புரையில் உயிரிழந்த அர்ஜுனன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முதல்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வழங்கி உள்ளார்.
கோபிசெட்டிப்பாளையத்தில் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தை அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 7ம் தேதி மேட்டுப்பாளையத்தில் தொடங்கினார். ஐந்து கட்டங்களாக நடைபெற்ற எழுச்சிப்பயணத்தில் 174 சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்த எடப்பாடி நேற்று (நவம்பர் 31) 175வது தொகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கட்டிட தொழிலாளியாக பணியாற்றும் 43 வயதான அர்ஜுனன் என்பவரும் வந்திருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் நடக்கும் இடத்திற்கு வருவதற்கு முன்னரே அர்ஜுனன் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அர்ஜுனன் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று அர்ஜுனனின் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அர்ஜுனனின் தாயாருக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அர்ஜுனன் தாயாரிடம் மாவட்ட கழகத்தின் சார்பாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “’இது மிக துயரமான சம்பவம். அர்ஜுனன் பல ஆண்டுகளாக அதிமுகவின் உறுப்பினராக இருந்து வருகிறார். அவரது இறப்பு எங்களுக்கு மிகுந்த மனவேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் கூறினோம். அவரது தாயாரை சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கிறோம். அர்ஜுனனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறோம். என்னுடன் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அர்ஜுனன் உயிரோடு இருந்தபோது கட்சிப் பணிகளில் ஆர்வத்தோடு ஈடுபட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அர்ஜுனன் தாயாரிடம் மாவட்ட கழகம் சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கி உள்ளோம். மேலும் தலைமைக் கழகத்தின் சார்பாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
