ADVERTISEMENT

விசிக, இடதுசாரிகளுடன் கூட்டணியா? கூட்டணி ஆட்சிக்கு தயாரா?: எடப்பாடி பழனிசாமி பேட்டி!

Published On:

| By Kavi

 edappadi palaniswami interview about 2026 election

மக்கள் விரோத திமுகவை வீழ்த்த பாஜக உடன் கூட்டணி அவசியம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். edappadi palaniswami interview about 2026 election

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

நேற்று மயிலாடுதுறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

ADVERTISEMENT

இந்த சூழலில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு எடப்பாடி பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேட்டியளித்துள்ளார். 

2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக எப்படி தயாராகி வருகிறது?

ADVERTISEMENT

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த 50 மாதங்களில் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல், கள்ளச்சாராய மரணங்கள், கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்கள், விலைவாசி உயர்வு, வரி சுமை என அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் ஸ்டாலின் மாடல் அரசின் மீது மக்களிடையே வெறுப்பு அதிகரித்து வருகிறது. தமிழக வரலாற்றில் இவ்வளவு ஊழல் நிறைந்த திறமையற்ற மக்கள் விரோத அரசு இருந்ததில்லை. 

இந்த நிலையில் அதிமுக அரசின் சாதனைகளை மக்களுக்கு நினைவூட்டுவதற்காக ஜூலை 7ஆம் தேதி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற மாநில அளவிலான சுற்றுப்பயணத்தை தொடங்கினேன். நான் எங்கு சென்றாலும் மக்களின் பெரும் ஆதரவை காண்கிறேன்.

எனவே 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெரும்.

நீங்கள் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று 8 ஆண்டுகள் ஆகிறது இல்லையா? 

எனது அரசியல் பயணம் அதிமுகவில் 46 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களின் ஆசிகளுடன் அதிமுகவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். மக்களின் பேராதரவு மற்றும் அதிமுக தொண்டர்களின் ஒத்துழைப்புடன் இந்த இலக்கை அடைவேன். 

அதிமுகவின் பலம் என்று நீங்கள் மதிப்பிடுவது என்ன? 

அதிமுகவில் இரண்டு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். நாட்டிலேயே உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. தமிழ்நாட்டில் நாங்கள்தான் பெரிய கட்சி. 

2019 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக நீங்கள் அளித்த பேட்டியில் ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவுக்கு வலுவான தேசிய தலைவர் இல்லை என்றும் மோடி மட்டுமே ஒரே வழி என்றும் கூறியிருந்தீர்கள்…

அதிமுக மாநில கட்சி. பாஜக தேசிய அளவில் வலுவான கட்சி. மாநிலத்தில் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமானால் மத்திய அரசின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை. திமுகவின் சர்வாதிகார ஆட்சியில், ஊழல், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, கடன் சுமை மற்றும் சரியான திட்டங்கள் இல்லாதது ஆகியவற்றால் மாநிலம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. நிர்வாகம் ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி உள்ளது. இப்படி ஒரு அரசாங்கத்தை அகற்றவும் தமிழ்நாட்டை மீட்டெடுத்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் பாஜகவுடன் கூட்டணி அவசியம் என்று அதிமுக நம்புகிறது. திமுக ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்றுவோம். 

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை? 

அரசியல் சூழ்நிலையை பொறுத்து தேர்தல் உத்திகள் வகுக்கப்படுகின்றன. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைவது அவசியமாகிவிட்டது. 2024 மக்களவைத் தேர்தலின் போது இது போன்ற சூழ்நிலை ஏற்படவில்லை. 

பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க தயாரா? 

கற்பனையான கேள்விக்கு நான் எப்படி பதிலளிக்க முடியும். அதிமுக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். 

நீங்கள் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காக எடுத்த முடிவும், அண்ணாமலை மாநில தலைவர் பொறுப்பிலிருந்து விலகியதற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? 

மற்ற கட்சிகளின் செயல்பாடுகளில் அதிமுக ஒருபோதும் தலையிடாது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறீர்களா? 

எங்கள் தேர்தல் உத்திகள் மற்றும் வழிமுறைகளை வெளிப்படுத்த முடியாது 

விஜய் இறங்கி வந்தால் பாஜகவுடன் கூட்டணியை முறித்து தவெகவுடன் கூட்டணி அமைப்பீர்களா? 

கற்பனையான கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை. 

பாஜக- தமிழக வெற்றி கழகம் இரண்டு கட்சிகளில் எது வலிமையான கட்சி? 

பாஜக தேசிய கட்சி. பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் அதற்கான பலம் உள்ளது. நாங்கள் எந்த கட்சிகளையும் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு பார்ப்பதில்லை. 

நாம் தமிழர் கட்சியுடனும், திமுக கூட்டணியில் உள்ள விசிக, இடதுசாரிகள் போன்ற கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதை பற்றி அதிமுக ஏதேனும் யோசித்துள்ளதா? 

திமுக ஆட்சியை அகற்ற அனைத்து கட்சிகளுடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயார். இதில் என்ன தவறு இருக்கிறது. 

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போல அதிமுக தலைமைக்கு சுறுசுறுப்பு இல்லை என்ற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்? 

அவர்கள் இருவரும் ஒப்பற்ற தலைவர்கள். அவர்களை யாருடனும் ஒப்பிட முடியாது. அப்படி செய்தால் அது முட்டாள்தனம். அவர்களால்தான் இந்த கட்சி வளர்க்கப்பட்டது. அவர்களின் வழிகாட்டுதலில் எப்பொழுதும் செயல்படும். இப்போது அதிமுக வலுவாகவும் துடிப்பாகவும் செயல்பட்டு வருகிறது. கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக வேலை செய்கிறார்கள். 

மோதல்கள், பிளவுகள் மற்றும் சித்தாந்த முரண்பாடுகள் ஆகியவை தான் அதிமுகவின் தோல்விக்கு வழி வகுத்தன என்ற குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன? 

தேர்தல் அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜம். 1996 இல் தோல்வியடைந்த பிறகு 2001 இல் நாங்கள் மீண்டும் பதவிக்கு வரவில்லையா? 2017இல் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்து மூன்றாவது இடத்தை பிடித்த திமுக 2021 தேர்தலில் ஆட்சிக்கு வரவில்லையா? 2024 மக்களவைத் தேர்தலில் நாங்கள் தனியாக போட்டியிட்டு வாக்கு பங்கை அதிகரித்துள்ளோம். 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். 

முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிட இயக்க தலைவர்களான பெரியார் மற்றும் அண்ணாவை அவமதித்தது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

பெரியார் மற்றும் அண்ணாவை அவதூறு செய்யும் வீடியோக்களை நாங்கள் கண்டித்து உள்ளோம். 

சட்டம் ஒழுங்கு பற்றி பேச அதிமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லி இருக்கிறாரே? 

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகன் என்ற ஒரே தகுதியுடன் முதல்வராகி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த ஸ்டாலினை விட மக்கள் நலனுக்காக பாடுபடும் அதிமுகவுக்கு அதிக தகுதி உள்ளது. 

தமிழகத்தின் கடன் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் தான் உள்ளது என்று தமிழக அரசு கூறுவது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

சுதந்திரம் பெற்றதில் இருந்து 2021 வரையிலான 75 ஆண்டுகளில் மாநில அரசின் கடன் 5 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு பெற்ற கடன் 4.5 லட்சம் கோடி ரூபாய். திமுக ஆட்சி காலம் முடியும்போது இந்த கடன் சுமை 5 லட்சம் கோடி ரூபாயை தாண்டும். கடன் வாங்குவது ஒரு சாதனையா. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மீதும் ரூ.1.5 லட்சம் கடனை சுமத்திய திமுக அரசின் திறமை இன்மையை நாங்கள் எதிர்க்கிறோம். edappadi palaniswami interview about 2026 election

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share