விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில்… இன்று (செப்டம்பர் 27) அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி அவரிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு உடல் நலம் விசாரித்திருக்கிறார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தேசிய அளவில் அதிமுக விலகிக் கொள்வதாக செப்டம்பர் 25 ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகியதால் அதிமுகவுடன் அணி சேர்வதற்கு… தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அரசியல் ரீதியாக இருந்த தடை நீங்கியது.
இந்த நிலையில் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் திருமாவளவனிடம் எடப்பாடி பழனிசாமி அலைபேசியில் உடல் நலம் விசாரித்த தகவல்… அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்தபோது,
“விசிக தலைவர் திருமாவளவன் கடந்த வாரம் தொடர் அலைச்சலில் இருந்தார். அப்போதே அவருக்கு இலேசான காய்ச்சல் உணர்வு ஏற்பட்டது.
செப்டம்பர் 25 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு நடத்திய சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கத்திலும் காய்ச்சலோடுதான் பேசினார்.
அன்று இரவு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றார். பிறகு தனது சமூகதளப் பக்கத்திலே,
‘செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 30 வரையில் தலைவர் சென்னையில் இல்லாத காரணத்தினால் தோழர்கள் யாரும் தலைவரை சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம்!’ என்ற அறிவிப்பை வெளியிட்டுவிட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.
இந்தத் தகவலைக் கேள்விப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலின் உடல் நலம் விசாரித்தார். பல தலைவர்கள் விசாரித்து வருகிறார்கள். பல மாநிலங்களில் இருந்து சக எம்பிக்கள் விசாரித்தார்கள்.
அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நேற்று (செப்டம்பர் 26) இரவு 8 மணிக்கு திருமாவளவனுக்கு செல்போன் அழைப்பின் மூலம் பேசி, நலம் விசாரித்துள்ளார்.
இது முழுக்க முழுக்க தனிப்பட்ட முறையிலான நலம் விசாரிப்பு. இதை வைத்து அரசியல் செய்வதற்கு இடமில்லை” என்றனர்.
–வேந்தன்
பள்ளி வளாகத்தில் உயிரிழந்த சிறுமிகள்: யார் பொறுப்பு?
சனாதன வழக்குகள் விளம்பரத்திற்காகவே: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு

Comments are closed.