சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெறவிருக்கிறது.
இதையொட்டி திமுகவில் எம்.பி.கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அமைத்தார். இந்த குழு முதல்கட்ட கூட்டத்தை நடத்தி முடித்துள்ளது.
இந்தசூழலில் எதிர்க்கட்சியான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்துள்ளார்.
நத்தம் விசுவநாதன், ஊ. பொன்னையன், பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செ. செம்மலை, பா. வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், எஸ்.எஸ். வைகைச்செல்வன் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பட்ட மக்களின் கருத்துகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் பெற்று வரும் வகையிலான சுற்றுப் பயணத் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
