ADVERTISEMENT

கிளாம்பாக்கத்திற்கு கூடுதல் நகரப் பேருந்துகள்: எடப்பாடி வலியுறுத்தல்!

Published On:

| By Selvam

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம் கிளம்பாக்கத்தில், கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி பேருந்து முனையம் திறக்கப்பட்டது.

புதிய பேருந்து நிலையத்தில் மக்களுக்கு போதுமான பேருந்து வசிதிகள் இல்லை, உணவு, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் முறையாக செய்து கொடுக்கவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தநிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவில் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 10) வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையப் பணிகள் முழுமையாக முடிவடையும் முன்பே, அதற்கு கலைஞர் பேருந்து நிலையம் என்று ஸ்டிக்கர் ஒட்டி அவசர கதியில் இந்த திமுக அரசு தைப் பொங்கலுக்கு முன்பே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்துவிட்டது.

சென்னையில் வசித்து வரும் வெளி மாவட்ட மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தைப் பொங்கலைக் கொண்டாட தங்களது சொந்த மாவட்டங்களுக்குச் செல்வார்கள்.

ADVERTISEMENT

இந்த ஆண்டு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், நகரப் பேருந்து மற்றும் மெட்ரோ இரயில் வசதி இல்லாமல், பொதுமக்களால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கே சென்றடைய முடியவில்லை.

ஓரளவு வசதி படைத்தவர்கள் பெரும் செலவில் வாடகை ஆட்டோ மற்றும் வாடகை சீருந்து மூலமாக கிளாம்பாக்கத்தைச் சென்றடைந்த நிலையில் அங்கும் போதுமான பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படாத நிலையில், உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகளுமின்றி பெரும் சிரமத்திற்குள்ளாயினர். பலர் தைப் பொங்கலுக்கு தங்கள் ஊர்களுக்குக்கூட செல்ல முடியாத நிலைமையும் ஏற்பட்டது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தினுள் உணவக வசதி, பணம் எடுக்கும் ATM மிஷின் வசதி, டீ, காபி, பால் விற்பனை நிலையங்கள், தண்ணீர் வசதி போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தராமல், அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை, தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளின் கோபத்தை இந்த திமுக அரசு சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.

இதை, திமுக அரசும், அதிகாரிகளும் பொருட்படுத்தவில்லையோ என்று பொதுமக்கள் கடும் கோபத்துடன் உள்ளனர். பொதுவாக, பயணிகள் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்குச் செல்வதைத்தான் பெரும் சிரமமாக கருதுவார்கள்.

ஆனால், சென்னைவாசிகளை அவர்களது இருப்பிடங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைச் சென்றடைவதையே பெரும் சிரமமாகக் கருத வைத்துவிட்டது இந்த நிர்வாகத் திறமையற்ற திமுக அரசும், அதன் பொம்மை முதலமைச்சரும்.

நேற்று முன்தினம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல அதிக அளவு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பேட்டி அளித்திருந்தார்.

அவரது பேட்டியை நம்பி, நேற்று (9.2.2024) இரவு தங்களது குழந்தைகள் மற்றும் உடமைகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான பயணிகள், போதுமான பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், இன்று (10.2.2024) காலை வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களிலும், வெட்ட வெளிகளிலும் படுத்துறங்கி அவதியுற்ற காட்சிகளையும், தங்களது ஊர்களுக்கு உடனடியாக பேருந்துகளை விடச்சொல்லி ஆர்ப்பாட்டம் செய்த காட்சிகளையும், குறிப்பாக திருச்சிக்குச் செல்லும் பயணிகள் சாலை மறியல் செய்த காட்சிகளையும் அனைத்து ஊடகங்களும், சமூக ஊடகங்களும் படம் பிடித்துக் காட்டி உள்ளன.

எனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவில் நகரப் பேருந்துகளை இயக்கியும், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்தி, பயணிகள் மன நிறைவுடன் பயணம் மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘வாடிவாசல்’ ஹீரோ மாறிட்டாரா?… லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

செயற்கை நுண்ணறிவுப் பாதையில் தமிழ்மொழி: ஸ்டாலின் பெருமிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share