கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் ரவியை சந்தித்து இன்று (ஜூன் 25) மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,
“திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டாவது முறையாக கள்ளச்சாராய மரணம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணம் மிகவும் மோசமானது. காவல்நிலையத்திற்கும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட இடத்திற்கும் 300 மீட்டர் தான் தூரம். நகரின் மையப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றுள்ளது.
ஜூன் 18-ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்திருக்கிறார்கள். சிலபேர் மருத்துவமனைக்கு சென்றபோது சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது. மறுநாள் மூன்று பேர் இறந்துள்ளனர். ஆனால், மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்திக்கின்ற போது வயது முதிர்வின் காரணமாகவும், வயிற்றுப்போக்கு காரணமாகவும் உயிரிழந்ததாக தெரிவித்தார். இதனால் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவில்லை.
ஆனால், இன்றைக்கு 60 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த முழு பொறுப்பையும் ஏற்று ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விசாரணை நியாயமாக நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால் சிபிஐ விசாரிக்க வேண்டும். ஆளும்கட்சி ஆதரவுடன் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. கல்வராயன் மலையில் வனத்துறை அனுமதியில்லாமல் கள்ளச்சாராயம் காய்ச்ச முடியாது. எனவே வனத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும்.
மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்கின்ற சிபிசிஐடி விசாரணை நடத்தினால் நியாயமாக விசாரணை நடைபெறாது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். எங்களுடைய கோரிக்கையை பரிசீலிப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாய்களை வளர்க்க ரூ.45 கோடி ஒதுக்கிய நடிகர்: யார் தெரியுமா?
”லாரா மட்டுமே எங்களை நம்பினார்“ : ஆப்கான் கேப்டன் ரஷீத் கான் உருக்கம்!