திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பத்திரப்பதிவு, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 10) சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சட்டமன்றத்தில் பேசியபோது,
“பத்திரப்பதிவு மற்றும் அரசு கட்டணங்கள் உயர்வு
இந்த அரசு பதவியேற்றவுடன் பத்திரப்பதிவு கட்டணங்கள், நில வழிகாட்டு மதிப்பு, இதர பதிவு கட்டணங்கள் அனைத்தும் பல மடங்கு உயர்த்தப்பட்டது.
இதனால் சாதாரண நடுத்தர மக்களின் நிலம், வீடு, சொத்துக்கள் வாங்குவது, விற்பது கடினமாக உள்ளது. எனவே உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்பப்பெற வலியுறுத்துகிறேன்.
மின் கட்டணம்
அதிமுக அரசு 2021 மார்ச் மாதம் வரை, மின்கட்டணத்தை உயர்த்தவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் கடும் மின் கட்டண உயர்வை தமிழக மக்கள் தலையில் சுமத்தியதோடு, இனி ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று இதுவரை 3 முறை மின் கட்டணத்தை உயர்த்தியது.
இரு மாதங்களுக்கு ஒருமுறைக்குப் பதில் மாதம் ஒருமுறை மின் கணக்கீடு அளவீடு செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில்தான் மின்கட்டணம் மிகக் குறைவாக உள்ளது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது தவறு.
வீட்டு மின்உபயோகம் மாதத்திற்கு 200 யுனிட் தமிழ்நாடு இந்திய அளவில் 9வது மாநிலமாக உள்ளது. அதாவது தமிழ்நாட்டை காட்டிலும் 8 மாநிலங்களில் மின் கட்டணம் குறைவு என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மாதம் 400 யூனிட் பயன்படுத்துபவர்கள் மின்கட்டணத்தில் 2019-20-இல் 12வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2023 இல் 18 வது இடத்திற்கு சரிந்தது. தமிழ்நாட்டில் இந்த பிரிவில் உள்ளவர்கள் யூனிட்டுக்கு ரூ 5.69 கட்டுகிறார்கள்.
மாதம் 600 யூனிட் பயன்படுத்துபவர்கள் மின்கட்டணத்தில் 2019-20 இல் 14வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2023 இல் 24 வது இடத்திற்கு சரிந்தது. தமிழ்நாட்டில் இந்த பிரிவில் உள்ளவர்கள் யூனிட்டுக்கு ரூ 7.29 கட்டுகிறார்கள்.
மாதம் 800 யூனிட் பயன்படுத்துபவர்கள் மின்கட்டணத்தில் 2019-20இல் 15வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2023 இல் 29வது இடத்திற்கு சரிந்தது. தமிழ்நாட்டில் இந்த பிரிவில் உள்ளவர்கள் யூனிட்டுக்கு ரூ 8.22 கட்டுகிறார்கள்.
மாதம் 1000 யூனிட் பயன்படுத்துபவர்கள் மின்கட்டணத்தில் 2019-20இல் 16வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2023 இல் 30 வது இடத்திற்கு சரிந்தது. தமிழ்நாட்டில் இந்த பிரிவில் உள்ளவர்கள் யூனிட்டுக்கு ரூ 8.78 கட்டுகிறார்கள்.
உணவுப் பொருட்கள் விலை உயர்வு!

ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்கள், குறிப்பாக தங்களது குழந்தைகளுக்கு பயன்படுத்தும் தரமான ஆவின்பால் மற்றும் பால் பொருட்களின் விலையை பலமுறை உயர்த்தியதுடன், பாலின் தரத்தையும், எடையையும் மாறுதல் செய்து மக்களை சொல்லொன்னா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த அரசு” என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஷாலுக்கு கழுத்து நரம்பு பிரச்னையா?- வெளி வந்த அதிர்ச்சி தகவல்கள்!
ஸ்டாலின் -எடப்பாடி… மாறி மாறி சவால்! சபாநாயகர் வைத்த ஃபைனல் டச்!