பாஜகவின் பிடியில் இருந்து அதிமுக விலகி வந்துவிட்டதை அதிமுகவின் பொதுச் செயலாளர் முதல் கடைக் கோடி தொண்டர்கள் வரை வெளிப்படையாகவே வரவேற்று வருகிறார்கள். சில நாட்களுக்கு முன் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய கட்சிகள் சேரும். பொறுத்திருந்து பாருங்கள்’ என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் அதிமுகவோடு டச்சில் இருப்பதாகவும் தகவல்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி எந்தெந்த கட்சிகளை தனது கூட்டணியில் இணைத்துக் கொள்ளப் போகிறார் என்பது எதிர்ப்பார்க்குரிய கேள்வியாக அரசியல் வட்டாரங்களில் எழுந்திருக்கிறது.
அதிமுக தலைமையில் வரும் 2024 மக்களவைத் தேர்தலில் மெகா கூட்டணி அமைக்க எடப்பாடி தீவிரமாக முயற்சித்து வருகிறார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்த மனித நேய ஜனநாயகக் கட்சி மீண்டும் தற்போது அதிமுக கூட்டணிக்கு திரும்புகிறது. எஸ்டிபிஐ போன்ற கட்சிகளுடனும் அதிமுக பேசி வருகிறது. அதிமுகவோடு தோழமையாக இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சு நடந்து வருகிறது.
இவற்றுக்கு இடையில் இன்னொரு முக்கியமான காய் நகர்த்தலையும் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து சேலம் வட்டார்த்தில் இருந்து நம்மிடம் பேசியவர்கள், “மக்கள் இயக்கத்தை வேகமாக செயல்படுத்தி வரும் நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து தனது அரசியல் பயணத்துக்கு ஆயத்தமாகியிருக்கிறார். அதற்காக பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளை விஜய் ஆரவாரம் இல்லாமல் அமைதியாக செய்து வருகிறார்.
எடப்பாடியின் மெகா ஆஃபர்… மெர்சல் ஆன விஜய்
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஒரு புள்ளி விஜய்யை சமீபத்தில் சந்தித்திருக்கிறார். ‘உங்களுக்கும் திமுகவுக்கும் இடையிலான பிரச்சினைகள் லியோ ஆடியோ லாஞ்ச் வரை நீடித்து வருகின்றன. உங்களது வளர்ச்சி உதயநிதிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால் உங்களை திமுக குறிவைத்து தாக்குகிறது. இந்த சூழலில் வர கூடிய மக்களவைத் தேர்தலில் உங்களது ஆதரவை நீங்கள் அதிமுகவுக்கு வழங்க வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் 60 இடங்களை உங்களுக்கு வழங்க எடப்பாடி தயாராக இருக்கிறார். இந்த காம்போ அமைந்தால் அது தமிழ்நாட்டு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிவிடலாம்” என்று எடப்பாடியின் தூதுவர் விஜய்யிடம் பேசியிருக்கிறார்.
இந்த தகவல்களைக் கேட்ட விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே தூதா என்று மெர்சல் ஆகியிருக்கிறார். ஆனாலும் தன்னிடம் எடப்பாடி பழனிசாமிக்காக பேசியவரிடம் இந்த விவகாரம் குறித்து எந்த கமிட்மென்ட் ஆன பதிலையும் விஜய் தெரிவிக்கவில்லை. ‘ இப்ப என்னங்க அவசரம்… நான் இன்னும் கட்சியே ஆரம்பிக்கலையே’ என்று அந்த நண்பரிடம் சொல்லிவிட்டார் விஜய்.
விஜய்யின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் எடப்பாடி” என்கிறார்கள் சேலத்து வட்டாரத்தில்.
வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சாதிவாரி கணக்கெடுப்பு வெளியிட தடை கோரி மனு: உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்டாவை காப்பாற்றுங்கள், பிறகு இந்தியாவை காப்பாற்றலாம்: அதிமுக ஆர்ப்பாட்டத்தில் உதயகுமார்