அதிமுக நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸில் எடப்பாடி ஆலோசனை!

Published On:

| By Selvam

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 9) காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். Edappadi Palanisamy discuss secretaries

2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கட்சியின் பலம், பலவீனம் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக தொகுதி நிலவரம் அறிவதற்காக, கள ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஜெயலலிதா பேரவை சார்பில் அதிமுகவின் சாதனைகள் மற்றும் திமுக அரசின் குறைபாடுகளை பொதுமக்களிடம் விளக்கி திண்ணை பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அதிமுக சார்பில் கட்சி ரீதியிலான 82 மாவட்டங்களுக்கும் கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமி பொறுப்பாளர்களை நியமித்தார்.

இந்தநிலையில், அமைப்பு ரீதியிலான 82 மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காணொலி காட்சி மூலமாக ஆலோசனையில் ஈடுபட்டார். நிர்வாகிகள் அனைவரும் தங்களது மாவட்டங்களில் இருந்தபடியே கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணை பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும், பூத் கமிட்டியை விரைவாக அமைத்து தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியாக தெரிகிறது. மேலும், மாவட்ட செயலாளர்களிடம் அவர்களுடைய மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள், குறித்தும் கேட்டறிந்தார்.

முன்னதாக, இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமியை கோவை மாவட்ட செயலாளரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி ‘அம்மா’ என்ற புத்தகத்தை கொடுத்து வரவேற்றார். Edappadi Palanisamy discuss secretaries

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share