ADVERTISEMENT

முறைகேடுகளைச் சொன்னால், கொலை மிரட்டல் தான் பதிலா?ஸ்டாலினுக்கு எடப்பாடி கண்டனம்!

Published On:

| By christopher

Edappadi palanisamy condemns Stalin

தன்னை கொலை செய்ய திட்டமிட்ட சதி என கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் புகார் அளித்ததை குறிப்பிட்டு, ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏடிஜிபி-யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா? என எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கு முதலில், ஏர் கண்டிஷனிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் தான் தீ விபத்து ஏற்பட காரணம் என தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

எனினும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயத்தில் முறைகேட்டை வெளிப்படுத்திய காரணத்தால் தன்னை உயிரோடு எரிக்க சதி நடந்ததாக கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சங்கர் ஜிவால், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல் ஆணையருக்கு புகார் அனுப்பினார்.

அதில், “தீ விபத்தால் முற்றிலும் எரிந்துபோன என் அறையை சென்று பார்த்த போது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். சற்று விரைவாக என் அறைக்கு நான் சென்றிருந்தால், நான் உயிரிழந்திருப்பேன். முறைகேடுகள் குறித்து நான் வெளிப்படுத்திய சில நாட்களில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது” என கல்பனா நாயக் குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில், 6 மாதம் ஆகியும் தனது புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் வேதனை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தமிழக அரசை குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

ADVERTISEMENT

நெஞ்சை பதற செய்கிறது!

அவர், ”தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ் தெரிவித்திருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

“சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்” என்ற அவரின் கூற்று நெஞ்சை பதற செய்கிறது.

தங்கள் துறையின் ஊழல்களைச் சொன்னதற்கே, அவரை கொலை செய்ய துணிந்துவிட்டார்கள் என்பது மிகவும் கீழ்த்தரமானது. இந்த செயலுக்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?

தமிழ்நாட்டில் ஒரு ஏடிஜிபி-யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப் படுகிறது என்றால், இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏடிஜிபி-யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா?

இந்த சூழல் இருக்கும் ஆட்சியில், மக்கள் எப்படி தங்கள் குறைகளை தைரியமாக சொல்ல முடியும்?

ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது என்பது ஸ்டாலின் தான் நிர்வகிப்பதாக சொல்லும் காவல்துறையின் மேல் தானே வைத்துள்ள பெரும் கரும்புள்ளி! இந்த கண்டனத்திற்குரிய வெட்கக்கேடான நிலைக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.

ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ்.-க்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு உறுதிசெய்ய வேண்டும்.

உடனடியாக ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களின் குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ளோர் இருப்பின், அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share