அண்ணன் என்று அழைத்தேன்… ஆனால்! – ஓபிஎஸ் சொந்த மண்ணில் விளாசிய எடப்பாடி

Published On:

| By Selvam

அதிமுகவில் பதவி கிடைக்காத விரக்தியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 2) தெரிவித்துள்ளார். Edappadi Palanisamy condemned OPS

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் மதுராபுரியில் இன்று அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், ‘எடப்பாடி ஓர் மூழ்கும் கப்பல். அதில் யாரும் ஏற மாட்டார்கள். நன்றி மறந்த துரோகியை அகற்றினால் தான் அதிமுக காப்பற்றப்படும்’ என்று கூறியிருக்கிறார்.

ஜெயலலிதா துரதிர்ஷ்டவசமாக இறந்துவிடுகிறார். அப்போது ஒரு சூழ்நிலையில் இவருக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை. அதனால் தர்மயுத்தம் செய்தார். இவருக்கு பதவி கிடைக்கவில்லை என்றால் எந்த எல்லைக்கும் போவார். பிறகு, ஒரு வழியாக என்னை முதல்வராக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தார்கள். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்கும்போது, அதிமுகவை அகற்ற வேண்டும் என்று திமுகவுக்கு துணை நின்று எதிர்த்து ஓட்டு போட்டவர் ஓபிஎஸ்.

நானா கட்சிக்கு துரோகம் செய்தேன்? அதுமட்டுமல்ல, இரட்டை இலை சின்னத்தையும் முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் கொடுத்தார். அதிமுக தலைமை கழகத்தை ரவுடிகளை கூட்டிக்கொண்டு போய் அடித்து நொறுக்கினார். இது துரோகமில்லையா?

கட்சியை விட்டு போகாதீர்கள் என்று எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தோம். நீங்களாக போனீர்கள். அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்கள் மீது பழிசுமத்த வேண்டாம். கடந்தகாலத்தை எண்ணிப்பார்க்க வேண்டும்.

எப்போது பார்த்தாலும் அம்மாவின் விசுவாசி என்கிறீர்கள். 1989-ஆம் ஆண்டு தேனி மாவட்டம் போடியில் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டபோது யாருக்கு வேலை செய்தீர்கள்? வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு தான் வேலை செய்தீர்கள். அதே தேர்தலில் அதிமுக சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். எப்போது பார்த்தாலும் சீனியர் என்கிறீர்கள். நீங்கள் 2001-ஆம் ஆண்டு தான் எம்.எல்.ஏ, நான் 1989-ஆம் ஆண்டிலேயே எம்.எல்.ஏ ஆகிவிட்டேன்.

ஆனால், உங்களுக்கு முதல்வர் பதவி வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் அதை ஏற்றுக்கொண்டு தோளோடு தோள் நின்றோம். உங்களுக்கு பதவி இல்லை என்று சொன்னதும், யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்.

ஆனால், நான் அப்படியில்லை. 2001-ஆம் ஆண்டு என்னுடைய தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஜெயலலிதா ஒதுக்கினார். என்னை வேறு தொகுதியில் போட்டியிட சொன்னார். நான் அந்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சொல்லி கூட்டணி கட்சியின் வெற்றிக்காக உழைத்தேன்.

அதுதான் கட்சிக்கு விசுவாசம். அதனால் தான் உங்கள் முன்னால் பொதுச்செயலாளராக நிற்கிறேன். இது மூழ்குகின்ற கப்பல் அல்ல, கரைசேர்கின்ற கப்பல். இந்த கப்பலில் ஏறியவர்கள் பிழைத்துக்கொள்ளலாம். ஏறாதவர்கள் நடுக்கடலில் சிக்கிக்கொள்வார்கள்.

நான் எந்த மேடையிலும் யாரையும் தவறாக பேசியதில்லை. ஓ.பன்னீர் செல்வத்தைக் கூட அண்ணன் என்று தான் சொல்கிறேன். ஏனென்றால் வயதில் மூத்தவர். ஆனால், இவர் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதை விட்டு பதவி கிடைக்கவில்லை என்பதால் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார். 2026-ஆம் ஆண்டு அதிமுக இருக்காது என்று சொன்னார். அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலர்ந்த பிறகு இதே மேடைக்கு நான் மீண்டும் வருவேன். இந்த கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share