பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணியா? – டெல்லியில் எடப்பாடி பேட்டி!

Published On:

| By Selvam

“மக்களுடைய பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காக தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம். கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 26) தெரிவித்துள்ளார். Edappadi Palanisamy clarifies aiadmk

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளோம். தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கான நிதி விடுவிக்காமல் காலதாமதமாகிறது. அந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், பிஎம் ஸ்ரீ கல்வி திட்டம் ஆகிவற்றில் மத்திய அரசிடம் இருந்து வழங்கவேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

அதேபோல தமிழகத்தில் பின்பற்றி வருகிற இருமொழி கொள்கையை தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்திற்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மறுசீரமைப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். டாஸ்மாக் ஊழல் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமித்ஷாவிடம் மனு அளித்திருக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து “அதிமுக, பாஜக கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டதா?” என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ” முழுக்க முழுக்க மக்களுடைய பிரச்சனைகளுக்காக தான் நாங்கள் அமித்ஷாவை சந்தித்தோம். 45 நிமிடங்கள் ஒவ்வொரு திட்டங்கள் குறித்தும் அவரிடம் எடுத்து சொன்னோம். நாங்கள் பேசியதை அமித்ஷா கவனமாக கேட்டார். தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று உறுதியளித்தார்.

தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு இருக்கிறது. இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து பேசவில்லை. 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் கூட்டணி அமைத்தோம். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களுடைய கொள்கை என்பது நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறும்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share