கொடநாடு வழக்கு: எடப்பாடி எழுப்பும் கேள்விகள்!

Published On:

| By Monisha

கொடநாடு வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக முரசொலியில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 30) மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கொடநாடு என்று சொன்னாலே எடப்பாடிக்கு கொல நடுக்கம் ஏற்படுகிறது என்ற முரசொலி தலையங்கம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “கொடநாடு வழக்கு குறித்து சட்டமன்றத்தில் கேட்டபோதே முதல்வர் பதில் சொல்லியிருக்கலாமே. அப்போதே நான் பல கேள்விகளை எழுப்பினேன். அப்போது ஏன் வாயை மூடிக் கொண்டிருந்தார்கள்.

நாட்டில் எவ்வளவோ சம்பவங்கள் நடைபெறுகிற போது இதை மட்டும் ஏன் மையமாக வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு செய்தியை பரப்பி கொண்டிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

கொடநாடு வழக்கு குறித்து அனைத்தையும் செய்தித்தாளில் போடுபவர்கள் சட்டமன்றத்தில் நான் பேசியதை ஏன் போடவில்லை.

கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக ஆட்சியில் தான். இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போது அந்த குற்றவாளிகளுக்காக வாதாட ஆஜரானவர்கள் திமுக வழக்கறிஞர்கள். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே குற்றவாளிக்கு ஆதரவாக வாதாடியிருக்கிறார். இதனை ஏன் தலையங்கத்தில் போடவில்லை.

ADVERTISEMENT

மேலும் கொடநாடு வழக்கில் குற்றவாளிக்கு ஜாமீன் தாரராக இருந்தவர் திமுகவை சேர்ந்தவர். ஜாமீன் தாரருக்கும் கொலை குற்றவாளிக்கும் என்ன சம்பந்தம். இதில் தான் சந்தேகம் ஏற்படுகிறது. இந்த வழக்கை ஏன் சிபிஐ விசாரிக்க கூடாது. இந்த வழக்கை சிபிஐ-க்கு ஒப்படையுங்கள்.

கொரோனா காலத்தில் நீதிமன்றங்கள் செயல்படாததால் தான் இந்த வழக்கில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் ஆட்சி மாறிய பிறகு ஐஜி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்து 790 பக்கம் அறிக்கை தாக்கல் செய்ததாகவும், 90 சதவீதம் வழக்கு விசாரணை முடிந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக தகவல். அப்படியிருக்கும் போது ஏன் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்?

அரசாங்கம் நியமித்த ஐஜி தலைமையிலான குழு 90 சதவீதம் விசாரணையை நிறைவு செய்த பிறகு மீதமிருக்கும் 10 சதவீதத்தை முடிக்க எவ்வளவு காலமாகும். ஆகவே திட்டமிட்டு எங்கள் மீது எந்த குற்றமும் சுமத்த முடியவில்லை என்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இது போன்று அடிக்கடி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

மோனிஷா

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உயர்நீதிமன்றத்தை அணுக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எடப்பாடி சாமி தரிசனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share