கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளிடம் பேருந்து நடத்துநர்கள் விவரங்களை சேகரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாடு முழுவதும் சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ஏராளமான பெண்கள் சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் பெண்களிடம் பேருந்து ஓட்டுநர்கள் விவரங்களை சேகரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம், அவர்களுடைய பெயர், வயது, மொபைல் எண், ஜாதி போன்ற 15 விவரங்களை அப்பேருந்து நடத்துநர்கள் விசாரித்து, போக்குவரத்துத் துறை வழங்கியுள்ள படிவங்களில் இவ்விவரங்களை பூர்த்தி செய்ய திமுக அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, பெரும்பாலான சாதாரண பேருந்துகளை விரைவு நகரப் பேருந்துகள், சொகுசுப் பேருந்துகள் என்று மாற்றிவிட்டு சாதாரண பேருந்துகளின் ஒட்டத்தைக் குறைத்துவிட்டதாகவும், அலுவலக நேரத்தில் பிங்க் நிற பேருந்துகள் அதிகப்படியாக இயங்காததால், பெரும்பாலான அலுவலகம் செல்லும் பெண்கள் மற்ற பேருந்துகளில் கட்டணம் செலுத்தி பயணம் செய்யக்கூடிய நிலைமையும், பிங்க் நிற பேருந்துகளில் பயணம் செல்லும் பெண்களை ‘ஓசி டிக்கெட்’ என்று அவமரியாதையாக நடத்துனர் முதல் அமைச்சர் வரை அழைத்த நிகழ்வுகளும் உண்டு என்று, திமுக அரசின் மீது பெண்கள் வைத்த குட்டுகள் அதிகம்.
இந்நிலையில், இப்பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் 15 வகையான விவரங்களை சேகரிப்பது, கட்டணமில்லா பேருந்தில் பயணம் செல்லும் பெண்களை ஏன் இப்பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி உள்ளதாகவும், இதுசம்பந்தமாக நடத்துனருக்கும், பெண்களுக்கும் இடையே தகராறுகள் ஏற்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக, பெண்களிடம் அவர்களது பெயர், வயது மற்றும் மொபைல் எண்ணைக் கேட்பது, அவர்களுடைய தனி உரிமையில் தலையிடுவது போலாகும். அதுவும், மொபைல் எண்ணை நடத்துநர்கள் வாங்கும்போது, அப்பெண்களுக்கு அருகில் உள்ளவர்களும் அவர்களின் மொபைல் எண்ணைக் குறிப்பெடுக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் ஒருசில நடத்துனர்களோ, அல்லது மொபைல் எண்ணை குறிப்பெடுத்த அருகில் உள்ளவர்களோ அப்பெண்களிடம் பேச முயற்சி செய்யக்கூடிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பெண்களின் மொபைல் போனுக்கு வேண்டாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவதற்கும் வாய்ப்புள்ளது.
இவை அனைத்தையும் விட, பயணம் செய்யும் பெண்களிடம் நடத்துனர்கள், நீங்கள் என்ன ஜாதி என்று கேட்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. உலகில் எங்கேயும் பேருந்து, ரயில், விமானம் மற்றும் கப்பல் போன்ற பொது போக்குவரத்தில் பயணம் செய்வோர் எவரிடமும் எந்த அரசும், எந்த போக்குவரத்து நிறுவனங்களும் இதுபோன்ற கேள்விகளைக் கேட்டதில்லை.
ஏற்கெனவே, சில மாவட்டங்களில் சாதிய ரீதியாக வேண்டாத பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்வுகளை திமுக அரசால் இதுவரை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், இந்த விவர சேகரிப்பு தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டால் ஏற்படும் பின்விளைவுகளை இந்த அரசு சிந்தித்ததா என்று தெரியவில்லை.
இதுபோன்ற மக்களை தூண்டிவிடக்கூடிய சென்சிட்டிவ் நடவடிக்கைகளை திமுக அரசு செயல்படுத்துவதற்கு முன்பு, மூத்த அமைச்சர்களையோ அல்லது அனுபவம் வாய்ந்த அதிகாரிகளையோ முழுமையாக கலந்தாலோசித்ததா? இதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்று சிந்தித்ததா? என்பது தெரியவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தமிழக மக்களுக்கு திமுக அரசின் முதலமைச்சருடைய நிர்வாகத் திறமையின்மை மீண்டும் ஒருமுறை தெள்ளத் தெளிவாகியுள்ளது.
திமுக அரசின் போக்குவரத்துத் துறையின் இதுபோன்ற வெட்கக்கேடான நடவடிக்கைகளுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடனடியாக இதுபோன்ற புள்ளி விவரங்களை சேகரிக்கும் பணிக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா