பிடிஆரை அமைச்சரவையில் இருந்து நீக்கினால் நிறைய உண்மை வெளியே வந்து விடும் என்று அச்சத்தில் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் ஓமலூர் பகுதியில் இன்று (மே 11) செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். “ஊழல் நடைபெற்றதன் அடிப்படையில் தான் அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது என்று தான் ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் செய்தி வருகிறது. மக்களின் எண்ணமும் அதுதான். ஒரே ஒரு ஆடியோ தான். அந்த ஒரு ஆடியோவிலேயே அரசாங்கம் ஆடி போய் விட்டது.
ஸ்டாலின் தலைமையிலான இந்த இரண்டு ஆண்டுக் கால ஆட்சி ஊழலைத் தவிர்த்து வேறு எதையும் செய்யவில்லை. எல்லா துறைகளிலும் ஊழல். ஊழல் இல்லாத துறையே கிடையாது என்பதற்கு சான்றுதான், முன்னாள் நிதியமைச்சர் தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சபரீசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு 30 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் புலம்புவதாக ஒரு நிதியமைச்சரே பேசியிருக்கிறார்.
இதனை சாதாரண நபர் சொல்லவில்லை. ஒரு நிதியமைச்சர் ஆடியோ மூலம் சொல்லியிருக்கிறார். இன்னும் நிறைய ஆடியோ வரும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதெல்லாம் வந்தால் இன்னும் நிறைய செய்திகள் கிடைக்கும். ஆகவே இரண்டு ஆண்டு காலத்தில் இவர்கள் செய்த சாதனை 30 ஆயிரம் கோடி கொள்ளை அடித்தது தான்” என்றார்.
தொடர்ந்து, பிடிஆரை அமைச்சரவையில் இருந்து நீக்காமல் வேறு துறையைக் கொடுத்துள்ளார்களே என்ற கேள்விக்கு, “அமைச்சரவையில் இருந்து நீக்கினால் உண்மை வெளியே வந்து விடும் என்ற அச்சத்தின் அடிப்படையில் தான் நீக்கம் செய்யாமல் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
ஒரு நிதியமைச்சர் இந்த ஆடியோ மூலம் கருத்து சொல்லியிருப்பது சாதாரண விஷயம் அல்ல. விபரம் தெரிந்தவர், பொருளாதார நிபுணர், மெத்த படித்தவர், திமுக தலைவர் ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர் ஒருவர் இப்படிப்பட்ட கருத்து சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
எனவே சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதனை அதிமுக நிச்சயமாக செய்யும். நிர்வாக காரணத்திற்காக முதலில் அமைச்சரவையை மாற்றியிருந்தால் பரவாயில்லை. ஆடியோ வெளியானதற்குப் பிறகு தானே மாற்றியிருக்கிறார்கள்.
ஆவினில் நிறைய முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது என்று நாங்கள் சொன்ன போதெல்லாம் யாரும் கேட்கவில்லை. இப்போது நாங்கள் சொன்னதை உண்மை என்று நிரூபிக்கும் விதமாக அவரை (நாசர்) அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்கள்” என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி.
மோனிஷா
ஓபிஎஸ் -தினகரன் சந்திப்பு… மாயமானும் மண்குதிரையும்: எடப்பாடி கிண்டல்!
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் முதல் பேட்டி!
