டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி க்ரீன் சிக்னல்! வேட்பாளர் அறிவித்த டிடிவி

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் , அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் மே தின பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற லைவ் வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்த வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

ADVERTISEMENT

“திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் 234 இலும் வெற்றி பெறுவோம் என்று அதிமுக-பாஜக கூட்டணி சேர்ந்த பிறகு நம்பிக்கையாக பேசியிருக்கிறார். Edappadi Green Signal! TTV announces candidate

இன்னொரு பக்கம்  அதிமுக-பாஜக தரப்பிலும் என்.டி.ஏ.வை பலப்படுத்துவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார்கள்  

ADVERTISEMENT

தமிழக பாஜகவின் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த வாரத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்  அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து வந்திருக்கிறார்.

இந்த சந்திப்புக்கு பிறகு தமிழ்நாட்டில் என். டி. ஏ. வை விரிவாக்க நடவடிக்கைகளில் நயினார் நாகேந்திரன் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்கிறார்கள்.

ADVERTISEMENT

டெல்லியில் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என பாஜக வட்டாரங்களை விசாரித்தபோது…

காஷ்மீர் பரபரப்பில் இருந்ததால் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நயினார் நாகேந்திரனிடம் விரிவாக பேசவில்லை. அதேநேரம் தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு அதிமுக- பாஜக கூட்டணியை மேலும் விரிவாக்க வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்திருக்கிறார்

’அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து விட்டீர்களா? ’ என்று நயினாரிடம் கேட்டிருக்கிறார் அமித் ஷா.

‘சட்டமன்றக் கூட்டத் தொடரில் இருவரும் பங்கேற்றோம். அப்போது சில முறை மனம் விட்டு பேசியிருக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறார் நயினார் நாகேந்திரன்.  என்.டி.ஏ.வில்  பழைய பார்ட்னர்களையும் சேர்க்க சொல்லி அவரிடம் தொடர்ந்து வற்புறுத்துங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் அமித் ஷா.

எடப்பாடியை பொறுத்தவரையில்…டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி நடத்தி வருகிறார். அதிமுகவுக்கு எதிராக நீதிமன்றத்திலோ, தேர்தல் ஆணையத்திலோ அவர் எந்த வழக்கும் தொடுக்கவில்லை.  எனவே அவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தனிக் கட்சியாக சேர்த்துக் கொள்வதில் சிக்கல் இல்லை என்று நினைக்கிறார்.  ஆனால்,    ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் அதிமுகவுக்கு எதிராக  வழக்கு நடத்தி வருகிறார்கள். எனவே அவர்களை சேர்ப்பதில்லை என்பதில் எடப்பாடி இன்னும் உறுதியாக இருக்கிறார்.

எடப்பாடிக்கும் தனக்கும் இடையிலான பிணக்கு ஒரு வழியாக முடிந்துவிட்டதை உறுதிப்படுத்தும் வகையில்தான் இன்று (மே 1) சோளிங்கரில் நடந்த அமமுக மே தின பொதுக்கூட்டத்திலே திமுகவை எதிர்ப்பது மட்டுமே தனது நோக்கம் என அறிவித்தவர், சோளிங்கர் அமமுக வேட்பாளர் பார்த்திபன் என்று வேட்பாளரையும் அறிவித்துவிட்டார் தினகரன். இப்போது சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் வசம் இருப்பதால், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிட்டாலும் ஆச்சரியம் இல்லை. Edappadi Green Signal! TTV announces candidate

பாஜக தரப்பிலோ, டிடிவி தினகரனையே எடப்பாடி ஏற்கும் பட்சத்தில் சசிகலாவை, ஓபிஎஸ் சையும் விரைவில் ஏற்க வைத்துவிடலாம் என்று நம்பிக்கையாக சொல்கிறார்கள்.

இதற்கிடையில்தான் நாளை மே 2 ஆம் தேதி அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. பாஜக கூட்டணி பற்றியும், அடுத்தடுத்த கூட்டணிக் கட்சிகளை இணைப்பது பற்றியும் இக்கூட்டத்தில் எடப்பாடி பேசுவார் என்பதுதான்  அதிமுக வட்டாரங்களில் உலவும் தகவல்” என்ற மெசேஜுக்கு செண்ட்  கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப். Edappadi Green Signal! TTV announces candidate

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share