ஜெயலலிதா பிறந்தநாள் : ராயப்பேட்டை அலுவலகத்தில் கொடியேற்றும் எடப்பாடி

Published On:

| By christopher

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 24) ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு அக்கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தியவர் ஜெயலலிதா. 1991, 2001, 2011, 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை வெற்றிபெற செய்து 6 முறை முதலமைச்சராக பதவி வகித்தார்.

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ADVERTISEMENT

எனினும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அதிமுக கட்சியினர் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

ADVERTISEMENT

இதனைத்தொடர்ந்து இன்று ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாட அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி இன்று காலை 9.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்கிறார்.

பின்னர் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ‘நமது அம்மா’ நாளிதழ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள பிறந்தநாள் விழா சிறப்பு மலரையும் வெளியிடுகிறார்.

அதேபோல தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

WT20WC : கடைசிவரை போராடிய இந்தியா… அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

கோடைக்காலத்தைச் சமாளிக்க காற்றாலை மின்சாரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share