எடப்பாடி நீலிக் கண்ணீர் வடிக்கிறார் : திமுக குற்றச்சாட்டு!

Published On:

| By christopher

Edappadi fake tears for govt employees : DMK alleges!

ஆட்சியில் இருக்கும் போது ஆசிரியர்களை கொச்சைப்படுத்தி விட்டு இப்போது அவர்களுக்காக எடப்பாடி பழனிசாமி நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என திமுக குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் நாள் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வாங்கும் ஊதியத்தைச் சொல்லி ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளமா எனக் கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைக் கேவலப்படுத்தினார்.

அவருடைய ஆட்சியில் போராடிய அரசு ஊழியர், ஆசிரியர்களைப் பார்த்து, ‘அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா?’ என்று கேட்டு, ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் கொச்சைப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இன்றைக்கு அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கிறார்.

இப்போது, ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக இந்த அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறி நீலிக் கண்ணீர் வடிக்கிறார். ஆனால், திமுக அரசு எல்லாக் காலத்திலும் ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் போற்றிப் பாதுகாத்து வருகிறது. அரவணைத்து வருகிறது.

கலைஞர் 19 ஆண்டுக்கால முதலமைச்சர் பொறுப்பில் 4 முறை ஊதியக் குழுக்களை அமைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்களை வழங்கி அரசு ஊழியர் ஆசிரியர்களின் பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளார்.

இதனை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நன்றாக அறிவார்கள். அதிமுக ஆட்சியில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 1 லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காகச் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் படிகள் ஏறி வழக்குத் தொடுத்து அவர்கள் போட்ட டிஸ்மிஸ் உத்தரவை ரத்து செய்ய வைத்து அத்தனை பேரையும் மீண்டும் பணியில் சேரவைத்த பெருமை திமுகவிற்கு உண்டு.

எப்போது போராட்டம் நடத்தினாலும், அவர்களைக் கைது செய்து வேலை நீக்கம் செய்வது அவர்களுக்கு வாடிக்கை. ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சி அமையும் காலங்களில் பழிவாங்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தண்டனைகளை ரத்து செய்து மீண்டும் அவர்களுக்கு வாழ்வளித்து வந்துள்ளதும் திமுக அரசுதான் என்பதனை யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை.

கடந்த 1988ஆம் ஆண்டு வரை குறைவான சம்பளம் பெற்று வந்த ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக 1989இல் ஊதியங்களை உயர்த்தித் தந்தது திமுக அரசு தான்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தடாலடியாக வீழ்ந்த தங்கம் விலை… வாங்குவதற்கு சரியான டைம் மக்களே!

’குரூப் 4 காலி பணியிடங்கள் இனி அதிகரிக்கப்படாது’ : டிஎன்பிஎஸ்சி திட்டவட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share