வைஃபை ஆன் செய்ததும் ‘விருந்து வைபவம்’ ஓயாது போலயே என தேநீரை குடித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
‘நெல்லை தேநீர் விருந்தா?
ஆமாம்.. நெல்லை வரும் அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து தருகிறார் நயினார். ஏற்கனவே பாஜக தலைவர்களுக்கு தனியே ஒரு விருந்து கொடுத்தார்; எடப்பாடி பழனிசாமிக்கு தனியே ஒரு விருந்து கொடுத்தார்.. இந்த வரிசையில் 3-வது விருந்து இது..
நயினார் ரொம்ப ஹேப்பியோ?
எங்க ஹேப்பியாக இருக்க விடுகிறார் அண்ணாமலை?
ஏன் அவர்தான் அமைதியாக இருக்கிறாரே?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சீண்டும் வகையில் ஒவ்வொரு பிரஸ் மீட்டிலும், முதல்வர் வேட்பாளர், கூட்டணி ஆட்சி பற்றி தாறுமாறாக பேசி வந்தார் அண்ணாமலை.. இதில் எடப்பாடி பழனிசாமி ரொம்பவே அதிருப்தியை காட்ட அண்ணாமலையின் பிரஸ் மீட் சவுண்ட் ஆப் செய்யப்பட்டது டெல்லியால்.
ஆனால் அண்ணாமலை ஓய்வதாக இல்லை. இந்த நபரிடம் பேசினால் அது அப்படியே எடப்பாடி பழனிசாமிக்கு போகும் என தெரிந்தே சிலரிடம் அண்ணாமலை பேசும் போது, “அதிமுக- பாஜக கூட்டணி எல்லாம் ஜெயிக்க முடியாது.. திமுக vs விஜய்யின் தவெக – இதுதான் களத்தில் இருக்கிற நிலவரம்.. நம்ம அதிமுக- பாஜக கூட்டணிக்கு 3-வது இடம்தான் கிடைக்கப் போகிறது” என பேசி வருகிறார்.
அண்ணாமலை எதிர்பார்த்தபடியே எடப்பாடியின் காதுகளுக்கும் இந்த தொடர்ச்சியான ‘சீண்டல்’ பேச்சுகள் அப்படியே ரீச் ஆகி இருக்கிறது.
செம்ம கடுப்பான எடப்பாடி, வேலுமணி மூலமாக நயினார் நாகேந்திரனுக்கு ஒரு விஷயத்தை ‘கறாராக’ சொல்லி அனுப்பினார். எடப்பாடியின் மெசேஜுடன் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி, “அண்ணாமலை இப்படியே பேசுகிறார்.. இதில் எங்க பொதுச்செயலாளர் ரொம்ப அதிருப்தியாக இருக்கிறார்.. அண்ணாமலை தொடர்ந்து பேசிகிட்டே இருந்தா நாங்க நேராக டெல்லிக்கு போய் அமித்ஷாவை பார்த்து, ‘இதெல்லாம் சரியாக வராது.. கூட்டணியில் இருந்து விலகுறோம்’ என சொல்லிவிடுவோம் என்றிருக்கிறார்.
வேலுமணி மூலமாக எடப்பாடி தமக்கு சொன்ன இந்த செய்தியால் நயினார் நாகேந்திரன் ரொம்பவே அதிர்ச்சி அடைந்து போனார்.. உடனடியாக அமித்ஷாவை தொடர்பு கொண்டு, களத்தை களேபரமாக்கும் அண்ணாமலையின் பகீர் விளையாட்டு பற்றி விவரித்திருக்கிறார்
நயினார் நாகேந்திரன்.
இந்த சம்பவம் முடிந்த கையோடுதான் இப்போது நெல்லைக்கு வருகிறார் அமித்ஷா.. இன்றைய தேநீர் விருந்தில் அண்ணாமலை, எச்.ராஜா, பொன்னார் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.. “நாம சொன்னதுக்கு ரியாக்ஷன் என்ன வருதுன்னு பார்ப்போம்” என எடப்பாடி தரப்பும் நெல்லை சீமையின் சேதிக்காக ரொம்பவே ஆவலோடு காத்திருக்கிறது’ என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
