பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? – எடப்பாடி பதில்!

Published On:

| By Selvam

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட அதிமுக, 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டது. இனிமேல் பாஜகவுடன் நாங்கள் கூட்டணி அமைக்கப்போவதில்லை, திமுக தான் பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வந்தார்.

இந்தநிலையில் இன்று (நவம்பர் 10) திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம், பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது,  2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி என்ற நிலைப்பாட்டை அதிமுக ஏற்க தயாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. கூட்டணியே இன்னும் அமைக்கவில்லை. பின்னர் எப்படி கற்பனையான ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியும்?” என்றார்.

அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமகவை வரவேற்க கதவை திறந்து வைத்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, “கதவை திறந்து வைப்பது மூடுவது எல்லாம் மற்ற கட்சிகளில் தான் இருக்கும். அதிமுகவை பொறுத்தவரை ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு.

தேர்தல் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது. அரசியல் சூழலுக்கு தக்கவாறு தான் கூட்டணி அமைக்கிறார்கள். தேர்தல் நெருங்கும்போது தான் யாருடன் யார் கூட்டணி அமைப்பார்கள் என தெரியவரும்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லையா? – ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்!

பயிர் சாகுபடி அளவீடு… மாணவர்களை பயன்படுத்துவதா? – சீமான் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share