எடப்பாடி கலந்துகொள்ளும் எஸ்டிபிஐ மாநாடு: திமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு!

Published On:

| By Aara

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் எஸ்டிபிஐ கட்சியின்,    ‘மதச்சார்பின்மை வெல்லட்டும்’ என்ற மாநாடு  இன்று ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் நடக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக தொடர்ந்து அதில் உறுதியாக இருக்கிறது.  எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் நடந்த அதிமுக பொது குழுவில் பேசும் போது,   ’எந்த தேசிய கட்சியை நம்பியும் அதிமுக இல்லை. அதிமுக தலைமையிலான கூட்டணியை அமைப்போம்.  பாஜகவோடு எப்போதும் கூட்டணி இல்லை’ என்று வெளிப்படையாக அறிவித்தார்.

இந்த நிலையில்தான் சமீபகாலமாக சிறுபான்மையினர் அமைப்புகள், கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் எடப்பாடி பழனிசாமி. கோவையில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற எடப்பாடி இன்று எஸ்டிபிஐ நடத்தும் மதச்சார்பின்மை வெல்லட்டும் என்ற மாநாட்டில் பங்கேற்கிறார்.

மதுரையில் 100 ஏக்கர் மைதானத்தில் நடக்கக்கூடிய இந்த  மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன.  அரசியல் ரீதியாக இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம்,  இந்த மாநாட்டுக்காக எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் திமுக தலைமையிலான கூட்டணியிலே இடம் பெற்றிருக்கிற மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து  மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

மாநாட்டுக்கான அழைப்பிதழை, விசிக – இஸ்லாமிய சனநாயகப் பேரவை மாநிலச் செயலாளர் அ.ரா. அப்துர் ரஹ்மானிடம், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் வழங்கி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார்.

இதேபோல மாநாட்டுக்கான அழைப்பிதழை, மமக மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் பிடம், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் வழங்கி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார்.

ஏற்கனவே திமுக கூட்டணியில் இவர்கள் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் மாநாட்டில் அவர்களையும் அழைத்ததற்கான காரணம் என்ன? திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியா?  என்று எஸ்டிபிஐயின் மாநில செயலாளர் ஏ. கே. கரீமிடம் கேட்டோம்.

“எஸ் டி பி ஐ கட்சி  தமிழ்நாட்டில் நடத்தும் இரண்டாவது மாநாடு இது.  மாநாட்டில் தற்போதைய இந்தியாவுக்கு தேவையான மதச்சார்பின்மை வெற்றி பெறுவதற்கான அவசியம் குறித்து எடுத்துரைக்கிறோம்.  இம்மாநாட்டுக்காக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என மும்மதங்களின் தலைவர்களையும் அழைத்திருக்கிறோம்.  மதச்சார்பின்மைக்காக பாடுபடுகிற கட்சிகளின் பிரதிநிதிகளையும் அழைத்துள்ளோம்.

அந்த வகையில் ஏற்கனவே நாங்கள் நடத்திய மாநாட்டிற்காக மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சி ஆகியவற்றை அழைத்திருந்தோம்.  அந்த வகையில் இன்று நடைபெற இருக்கிற மாநாட்டுக்காகவும் அவர்களை அழைத்தோம்.  நாங்கள் அவர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழை நேரில் சந்தித்து அளித்தபோது…  தேவையான நேரத்தில் நடக்க வேண்டிய தேவையான மாநாடு இது என்று சொல்லி தங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.  அரசியல் சூழ்நிலையால்  ஒருவேளை இந்த மாநாட்டுக்கு வர முடியாமல் போனால் கூட இந்த மாநாடு எடுத்துரைக்கிற மதசார்பின்மை என்றும் தத்துவத்திற்கு அவர்கள் என்றுமே ஆதரவாக தான் இருக்கிறார்கள். மற்றபடி  கூட்டணிக் குழப்பத்துக்கான எந்த வித முயற்சியும் இதில் இல்லை”  என்றார் கரீம்.

வேந்தன்

இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு: டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!

அனிமல் படத்தின் வெற்றி ஆபத்தானது: எழுத்தாளர் ஜாவித் அக்தர் விமர்சனம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share