மழைநீர் வடிகால் தொடர்பாக வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிடும்படி எடப்பாடி பழனிசாமி கேட்டிருந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் இன்று (அக்டோபர் 16) பதிலளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ”கனமழையால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய, நடுத்தர மக்கள், ஆதரவற்றோர் மற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் வயிறார உண்பதற்கு வசதியாக, அம்மா உணவகங்களில் மூன்று நேரமும் தரமான உணவை வழங்க உனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ”சென்னையில் வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு 2021-ல் அமைக்கப்பட்ட திருப்புகழ் கமிட்டி அறிக்கை வந்துவிட்டதா? அதில் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களில் ஸ்டாலினின் திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எவ்வளவு மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன? எத்தனை சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன? என்பதையெல்லாம் இந்த அரசு, வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஸ்டாலினின் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சென்னையில் வெள்ள தடுப்புப் பணிகள் மேற்கொண்டதைப் பற்றி முழுமையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று” வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் எடப்பாடி வெள்ளை அறிக்கை கேட்டது குறித்து சென்னையில் மழை நிவாரண பணிகளை தொடர் ஆய்வு செய்து வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ”வெள்ள நீர் தேங்காமல் இருக்கிறதே, அது தான் வெள்ளை அறிக்கை” என பதிலளித்தார்.
மேலும் அவர், “கடந்த 2 நாட்களாக சென்னையில் கனமழை பெய்தது அனைவருக்கும் தெரியும். முதலமைச்சர் உத்தரவின் பேரில் அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கவுன்சிலர்கள் அனைவரும் களத்தில் இறங்கி மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் பணியாற்றி வருகிறோம்.
இன்று கனமழை பெய்யும் என கூறியிருந்தனர். ஆனால் லேசான மழை மட்டுமே இதுவரை பெய்துள்ளது. இனிமேல் கனமழை பெய்தாலும், தமிழக அரசு அதற்கும் தயாராக இருக்கிறது” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் பாதிப்பு தொடருமா? – பிரதீப் ஜான் சொன்ன தகவல்!
கடைசி வரை நடிகர் திலகம் பாட்டு… அமைதியாக அடக்கம் செய்யப்பட்ட சிங்கப்பூர் சிவாஜி
