“யாராலும் பிரிக்க முடியாது” : செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு எடப்பாடி பதில்!

Published On:

| By Kavi

அதிமுக ஒற்றுமையாக இருக்கிறது, யாராலும் அதை உடைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். Edappadi answer to question about Sengottaiyan

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 17) கலந்துகொண்ட பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவரிடம் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம், செங்கோட்டையன் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

நீங்கள் கொண்டு வந்த தீர்மானத்தை ஓபிஎஸ் ஆதரித்திருக்கிறாரே?

அவருக்கும் சபாநாயகர் உரிய வாய்ப்பு கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் தான் அவரும் சபாநாயகரை எதிர்த்திருக்கிறார்.

அதிமுக ஒத்த மனநிலையில் வந்திருக்கிறது என்று பார்க்கலாமா?

நீங்கள் அப்படி புரிந்துகொண்டால்… நாங்கள் என்ன செய்வது. நீங்கள் நினைப்பதற்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது.

உட்கட்சி பிரச்சினையை திசை திருப்பத்தான் அதிமுக சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது என்று முதல்வர் சொல்லியிருக்கிறாரே?

நான் என்னென்ன காரணத்துக்காக சபாநாயகரை நீக்க வேண்டும் என்று சொன்னேனோ அதை முதல்வர் மறுக்கவில்லையே. அவர்தான் திசை திருப்பும் வகையில் பேசுகிறார். சபாநாயகர், அந்த இருக்கையில் அமர்ந்ததும் முதலமைச்சரின் ஆணைபடி தான் செயல்படுகிறோம் என்கிறார். அதனால் தான் இவரை யார் இயக்குகிறார் என்று கேட்டேன். சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, முதலமைச்சர் என்றெல்லாம் பார்க்கக் கூடாது. அதையெல்லாம் மறந்து இப்படி சொல்கிறார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்றும் உங்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தனித்து செயல்படுகிறாரே?

அது உங்களுக்கு ரொம்ப அவசியமான கேள்வி. ஏங்க… எங்களை பிரித்து பார்க்கிறீர்கள்? உஷாராதான் கேள்வி கேட்கிறீர்கள். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைங்க. நாங்கள் ஒற்றுமையாகதான் இருக்கிறோம். யாராலும் பிரிக்க முடியாது. நான் என்றைக்கு முதல்வராக பதவி ஏற்றேனோ… அன்று முதல் இதுபோன்ற திட்டங்கள் நடக்கிறது. அதையெல்லாம் உடைத்து எறிந்து வருகிறோம் . அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது. அப்படி நினைத்தால் மூக்கு உடைந்து போவீர்கள்” என்று பதிலளித்தார். Edappadi answer to question about Sengottaiyan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share