கலெக்டர், எஸ்.பி.க்கே இந்த நிலைமையா? : திமுகவுக்கு எடப்பாடி, அன்புமணி கடும் கண்டனம்!

Published On:

| By Kavi

Edappadi anbumani strongly condemns DMK

திமுகவின் காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். Edappadi anbumani strongly condemns DMK

தர்மபுரி திமுக மாவட்ட பொறுப்பாளராக தர்ம செல்வன் சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிலையில், அரசு அதிகாரிகள் குறித்து அவர் பேசியுள்ள ஆடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில், “நான் சொல்வதை கேட்கவில்லையென்றால் எந்த அதிகாரியும் இருக்கமாட்டான். இதில் யாரும் தலையிட முடியாது. நீங்கள் நினைக்கிற ஆட்களையெல்லாம் மாற்ற முடியாது. நான் லெட்டர் கொடுத்தால் தான் மாற்ற முடியும். அதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். கலெக்டர், எஸ்.பி, அதற்கு கீழ் இருக்கும் அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதை கேட்க வேண்டும். கேட்கவில்லையென்றால் அவர்கள் அந்த பதவியில் இருக்கமாட்டார்கள்” என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

இதுகுறித்து நமது மின்னம்பலத்தில் ”கலெக்டர், எஸ்.பி… நான் சொல்வதை தான் கேட்க வேண்டும்” : திமுக மா.செவின் அதிரவைத்த ஆடியோ!” என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில் தர்மசெல்வனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (பிப்ரவரி 28) அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திமுக தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உட்பட ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வருகின்றன. தர்மபுரியில் மட்டுமல்ல இதுபோன்ற மிரட்டல்கள் திமுகவினரால் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருவதன் எடுத்துக்காட்டு தான் இது.

ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியில் திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதும், அரசு அதிகாரிகளை மிரட்டி தங்கள் ஏவலுக்கு அடிபணிய வைப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. திமுகவினரின் மிரட்டலால் அரசு அதிகாரிகள் மன அழுத்தத்தினாலும் வேதனையிலும் சோர்வுற்று இருப்பதை உணர முடிகிறது.

மேலும் இந்த ஆட்சியில் அதிகாரிகள் அத்துமீறுவதும், காவல்துறை ஏவல்துறையாக மாறியிருப்பதும் இத்தகைய அழுத்தத்தால் தானா என்ற கேள்விக்கு இதுவே பதிலாகவும் அமைந்துள்ளது. ஆட்சியரையே மிரட்டத் துணிந்தவர்கள், சாமானிய மக்களை எத்தகைய இன்னலுக்கு ஆளாக்குவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அரசு அதிகாரிகளையும், மக்களையும் வஞ்சிக்கும் இந்த காட்டாட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பதே இதற்கு தீர்வாக அமையும்” என்று பதிவிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அதிகாரிகளை மிரட்டும் ஆடியோ வெளியாகியிருப்பதால் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் திமுகவினரால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். அவற்றுக்கான ஆதாரங்கள் இல்லாததால் அவை வெளியுலகத்திற்கு தெரியவில்லை. இப்படியாக தமிழ்நாடு முழுவதும் திமுகவினரால் அதிகாரிகள் தொடர்ந்து அவமரியாதை செய்யப்பட்டு வருகின்றனர். ஏதோ சில காரணங்களுக்காக அதிகாரிகளும் இதை சகித்துக் கொள்வது வேதனையளிக்கிறது.

அதிகாரிகள் என் பேச்சைக் கேட்காவிட்டால் அவர்களின் கதையை முடித்து விடுவேன், அவர்கள் இனி இருக்க மாட்டார்கள் என திமுக மாவட்டச் செயலாளர்களை வைத்து மிரட்டுவது தான் திராவிட மாடலா? என்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். அதிகாரிகளை அச்சுறுத்திய திமுக மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.Edappadi anbumani strongly condemns DMK

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share