வைஃபை ஆன் செய்ததும் பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இரண்டாவது நாளாக சென்னையில் இருக்கும் அப்டேட்டுகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. edapadi vijay prasanth kishore deal
அது பற்றி விசாரித்து விட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“நேற்று பிப்ரவரி 10ஆம் தேதி சென்னை வந்த பிரசாந்த் கிஷோர், தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை சந்தித்தார். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய விஷயங்களைப் பற்றி ஆலோசித்தார்.
அதன் பிறகு தவெக வின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவோடு நேற்று இரவு ஆலோசனை செய்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.
பிரசாந்த் கிஷோரின் இரண்டாவது நாள்… edapadi vijay prasanth kishore deal

இன்று ஆந்திராவுக்கு செல்வதாக இருந்த பிரசாந்த் கிஷோர் தனது பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு… மீண்டும் இன்று காலை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, புஸி ஆனந்த், விஜயின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரோடு சில மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
பிரசாந்த் கிஷோர் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு ஆலோசகராக பணியாற்ற போகிறார் என்று தான் கடந்த ஒரு மாதமாகவே செய்திகள் வந்தன.
எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன், விசிகவில் இருந்து விலகி அதிமுகவில் சேரத் தயாரான ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இதற்கான முன்னெடுப்புகளை தீவிரமாக செய்தனர். ஆதவ் அர்ஜுனா கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோரை திமுகவுக்கு தேர்தல் பணியாற்ற அழைத்து வந்ததில் பங்கு வகித்தவர். அந்த அடிப்படையில் சமீபமாக பிரசாந்த் கிஷோரை அதிமுகவுக்கு அழைத்து வருவதற்கு தீவிரமான வேலைகளை செய்து வந்தார்.
ஆனால் ஆதவ் அர்ஜுனா பிப்ரவரி 16ஆம் தேதி பாட்னாவில் பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசிய நிலையில் இந்த போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டன.
விஜய் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, சில நாட்களிலேயே பிரசாந்த் கிஷோரை சென்னைக்கு அழைத்து வந்து விஜயை சந்திக்க வைத்து விட்டார்.

அதிமுகவின் பலம், பலவீனம்…
இதையடுத்து, பிரசாந்த் கிஷோர் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்காக பணியாற்றப் போகிறாரா, அல்லது தமிழக வெற்றி கழகத்துக்கு பணியாற்ற போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. edapadi vijay prasanth kishore work whom?
இது பற்றி இரு கட்சி வட்டாரங்களிலும் விசாரித்தபோது, ஏற்கனவே டிஜிட்டல் திண்ணையில் வெளியிட்ட தகவலின் அடுத்தடுத்த டெவலப்மென்ட்டுகள் கிடைத்தன.
ஏற்கனவே டிஜிட்டல் திண்ணையில் பாட்னா டு பட்டினப்பாக்கம் ஆதவ் அர்ஜுனாவின் ஆட்டத்தை மாற்றிய பிரசாந்த் கிஷோர் என்ற தலைப்பில் செய்தி வெளியிடப் பட்டிருந்தது
அதாவது பிரசாந்த் கிஷோரின் ஆலோசனை படியே ஆதவ் அர்ஜுனா விஜய்யை சந்தித்தார், விஜய் கட்சியில் இணைந்தார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
2021 இல் திமுகவோடு பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் அக்கட்சியை வெற்றி பெற வைத்தார். ஆனபோதும் அதிமுக சுமார் 70 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 2021 இல் தேர்தல் பணியாற்றிய போது அதிமுக பற்றிய விவரங்களையும் சேகரித்து வைத்திருந்தார் பிரசாந்த் கிஷோர். எதிரி என்ற அன்றைய நிலையில்… அதிமுகவின் பலம், பலவீனம் பற்றி அப்போதே ஸ்டடி செய்து வைத்திருந்தார்.
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக பணியாற்ற வேண்டிய சூழல் இப்போது ஏற்பட்டுள்ள நிலையில்… திமுகவை எதிர்ப்பதற்கு வலிமையான கூட்டணி வேண்டும் அப்படி வலிமையான கூட்டணி அமைந்தால்தான் சமீபமாய் சோர்ந்திருக்கும், தனது கேரியருக்கும் வெற்றியாக அமையும் என்று கருதுகிறார் பி.கே.
பாட்னா சந்திப்பு பாலிடிக்ஸ்
இதுபற்றி முதலில் ஆதவ் அர்ஜுனா மூலம் விஜய்க்கு தகவல் அனுப்பிய பி.கே, அதன் பின் பிப்ரவரி 10 ஆம் தேதி விஜய்யை சந்தித்தார். அப்போது விஜய்யிடம், ‘வலிமையான கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்தினால் மட்டுமே அது தவெகவின் எதிர்காலத்துக்கு ஏற்றதாக அமையும்’ என கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து விஜய் நேற்று பிரசாந்த் கிஷோரிடம் உறுதியான பதில் எதையும் சொல்ல வில்லை. அதேநேரம் அதிமுகவுக்காக பணியாற்றப் போகிறார் பிரசாந்த் கிஷோர் என்று தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அவரை சந்திக்க விஜய் முன் வந்ததே… ஒரு பாசிடிவ் சிக்னலாக பார்க்கப்படுகிறது என்கிறார்கள் தவெக வட்டாரங்களில்.

எடப்பாடியை சந்தித்தாரா பிரசாந்த் கிஷோர்?
இன்னொரு பக்கம் விஜய்யை சந்தித்து முடித்த பின், எடப்பாடி பழனிசாமியையும் பிரசாந்த் கிஷோர் சந்தித்தார் என்று தகவல்கள் பரவின. ஆனால், நேற்றிரவு பிரசாந்த் கிஷோர் -ஆதவ் அர்ஜுனா சந்திப்பு முடிய இரவு 10 மணி ஆகிவிட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி, தனது மகன் மிதுனுடன் நேற்றிரவு 9. 30 மணிவாக்கில் சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு புறப்பட்டார். கோவையில் எடப்பாடியை வரவேற்க வந்திருந்தார் எஸ்.பி. வேலுமணி.
இதற்குள் விஜய் சந்திப்பு குறித்த விவரங்களை எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். அதன் அடிப்படையில் கோவையில் வேலுமணியோடு ஆலோசித்துள்ளார் எடப்பாடி. ஆக நேற்று எடப்பாடியை பிரசாந்த் கிஷோர் சந்திக்கவில்லை. ஜனவரி 16 ஆம் தேதி ஆதவ்விடம் பாட்னாவில் சொன்னதன்படி, தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி கூட்டணியை வலிமைப்படுத்துவதில் இப்போது செயலாற்றி வருகிறார் பிரசாந்த் கிஷோர். அதாவது அதிமுகவுக்கு தேர்தல் ஆலோசகர் என்பதற்கு முன்பாகவே… அதிமுக-தவெக கூட்டணிக்கு தூதராக பணியாற்றவும் ஆரம்பித்துவிட்டார் பிரசாந்த் கிஷோர். ஆபரேஷன் சக்சஸ் ஆனதும் வெளிப்படையாக இருவரும் சந்திப்பார்கள் என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.
இந்த நகர்வுகளை ஆளும் திமுக உற்று கவனித்து வருகிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் தவெக தனியாக நின்றால்தான் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்பதால்… அதற்கான வேலைகளில் திமுக தரப்பு ஒரு பக்கம் தீவிரமாகியிருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.