டிஜிட்டல் திண்ணை: டெல்லி தூது, -பாஜகவை உடைக்க உத்தரவிட்ட எடப்பாடி

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் புதிய நிர்வாகிகள் தொடர்பான அறிவிப்புகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றை பார்த்து விட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“கடந்த நவம்பர் 21ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பூத் கமிட்டிகள் அமைக்க வேண்டிய அவசியம் பற்றியும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வியூகங்கள் பற்றியும் விவாதித்தார் எடப்பாடி. அப்போது பாஜகவுடன் இனி கூட்டணி கிடையவே

ADVERTISEMENT

கிடையாது என்ற உறுதியையும் மாசெக்களுக்கு அளித்தார்.

அதன் பிறகு தலைமைக் கழக நிர்வாகிகளிடம் ஆளுநர் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவர் மீது ஊழல் வழக்கு விசாரணை தொடர்வதற்கு அனுமதி அளித்தது பற்றி விரிவாக விவாதித்திருக்கிறார் எடப்பாடி.

ADVERTISEMENT

செப்டம்பர் 18ஆம் தேதியே பாஜக உடனான கூட்டணி முடிந்துவிட்டது. ஆனாலும் இரண்டு மாதங்கள் கழித்து இன்று வரையிலும் அதிமுக- பாஜக கூட்டணி மறைமுகமாக தொடர்கிறது என்றும் கள்ளக் கூட்டணி நாடகக் கூட்டணி என்றும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. ஆனால் இதற்கு எதிராக ஆளுநர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார் என்று குறிப்பிட்ட எடப்பாடி, இதை நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிறகு அவர் தனிப்பட்ட முறையில் தலைமைக் கழக நிர்வாகிகளிடம் பேசியபோது,  ’பாஜகவின் தேசிய தலைமை அறிவுறுத்தலின் பேரில் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி அமைய வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துரைப்பதற்காக சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறார்கள். ஆனால் நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் நம்மை மிரட்டிப் பார்க்கத்தான் ஆளுநர் மூலமாக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை வேகப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

ADVERTISEMENT

அடுத்து குட்கா விவகாரத்தில் அமலாக்கத்துறை நுழைந்தாலும் நுழையலாம். ஆனாலும் நமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. பாஜகவுடன் இனி கூட்டணி வைத்தால் 2024 இல் மட்டுமல்ல 2026லும் தோல்வி நிச்சயம்’ என்பதை தலைமை கழக நிர்வாகிகளிடம் எடுத்துரைத்திருக்கிறார்.

மேலும், ’அதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜக நிர்வாகிகள் அதிமுகவுக்கு வருவதற்கு தயாராக இருந்தால் உடனடியாக அவர்களை இணையுங்கள். அதிமுகவில் இணைகிற பாஜக நிர்வாகிகளுக்கு அவரவருக்கு ஏற்ற வகையில் அதிமுகவில் புதிய பொறுப்புகளையும் வழங்குங்கள்’ என்றும் உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி.
மாவட்ட செயலாளர் கூட்டம் நடந்த அன்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியின் மாப்பிள்ளை அசோக்குமார் எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அவரை அதிமுகவுக்கு கொண்டு வந்ததில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. வி. ராமலிங்கத்தின் பங்கு பெரியது.

எடப்பாடியிடம் பேசிய கே. வி. ராமலிங்கம், ’மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி கூட விரைவில் அதிமுகவுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது நான் அவரிடம் தொடர்ந்து பேசி வருகிறேன்’ என்று கூறியிருக்கிறார் அதற்கு மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் தனக்கும் பாஜக மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் நெருக்கடி கொடுக்க முனைந்துள்ள நிலையில்…அதற்கு முன்பே தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜகவை உடைத்து அதிமுகவில் சேர்த்து பாஜகவுக்கு அரசியல் நெருக்கடியைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் திட்டம். அதற்கான வேலைகள் தீவிரமாகியிருக்கின்றன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

தேஜஸுக்கு பின்னால கங்கனா கவர் ஸ்டோரி: அப்டேட் குமாரு

உங்கள் தொகுதி கோயிலுக்குச் சென்று… தெலங்கானா காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு திடீர் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share