அடுத்த ரவுண்டு ஆட்டம்… அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

Published On:

| By Aara

ED summons again minister K Ponmudy

உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை விசாரணைக்கு ஆஜராகுமாறு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது என்று தகவல்கள் வந்துள்ளன. வரும் நவம்பர் 30 ஆம் தேதி சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. ED summons again minister K Ponmudy

திமுக அரசின் முக்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களாக சிறையில் இருக்கிறார். கடந்த ஜூன் மாதம் அவர் கைது செய்யப்பட்ட பிறகு, அடுத்ததாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை விசாரணைக்காக ஜூலை மாதம் அழைக்கப்பட்டார்.

முந்தைய திமுக ஆட்சியில் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2.65 லட்சம் லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் பொன்முடி மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இதில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக பிறகு அமலாக்கத்துறை இதனுள் புகுந்தது.

செம்மண் விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை 17 ஆம் தேதி காலை அமைச்சர் பொன்முடி அவரது மகன் கௌதம சிகாமணி எம்பி தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியது அமலாக்கத்துறை. பிறகு அன்று இரவு அமைச்சர் பொன்முடியை சென்னையிலுள்ள அவரது வீட்டில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். இரவு தொடங்கி நள்ளிரவு தாண்டி அதிகாலை 3 மணி  வரை விசாரணை செய்த அமலாக்கத்துறையினர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி  சொல்லி அனுப்பினர். பின் அதிகாலை வீட்டுக்கு சென்று மறுநாள் மாலை ஆஜரானார் அமைச்சர் பொன்முடி.

அவரது மகன் கௌத சிகமாணி எம்பியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவரது வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக துருவித் துருவி கேள்விகள் கேட்கப்பட்டதாக அப்போது தகவல்கள் வந்தன.

இந்த பின்னணியில் 4 மாதங்கள் கழித்து மீண்டும் வரும் நவம்பர் 30 ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென்று அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக பல்கலைக் கழகங்களில் வேந்தராக ஆளுநருக்கு பதில் முதல்வரே இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய சட்ட மசோதாக்களை ஆளுநர் அண்மையில் திருப்பி அனுப்பினார். அவற்றை நவம்பர் 18 ஆம் தேதி மீண்டும் சட்டமன்றத்தில் வைத்து நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு.

இதற்கிடையே சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட மறுத்தார் ஆளுநர். இது தொடர்பாக ஆளுநரை கடுமையாக சாடி வந்தார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. மேலும் கடந்த சில பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநர் கலந்துகொள்ளும் நிலையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொள்வதில்லை.

இப்படிப்பட்ட அரசியல் சூழலில்தான் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது என்பதையும் குறிப்பிடுகிறார்கள் திமுக வட்டாரங்களில்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக பிரமுகர்களைக் குறிவைத்து அமலாக்கத்துறை தனது அடுத்த ரவுண்டு ஆட்டத்தைத் தொடங்கியிருப்பதாகவும் டிசம்பரில் அது தீவிரம் அடையும் என்றும் பாஜக வட்டாரங்களில் கூறுகிறார்கள். ED summons again minister K Ponmudy

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மாநில அரசு சொல்வதன் படி தான் ஆளுநர் செயல்பட முடியும்: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share