டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெக்லாட்டிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 30) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை கஸ்டடி வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியா கூட்டணி கட்சிகள் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் நாளை பேரணியில் ஈடுபட உள்ளனர்.
இந்தநிலையில், மதுபான வழக்கில் டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டிற்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியது. இதனையடுத்து அமலாக்கத்துறை விசாரணைக்காக கைலாஷ் ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஆம் ஆத்மி மூத்த தலைவர் திலீப் குமார் கூறும்போது, “அமலாக்கத்துறை எங்களுக்கு சம்மன் அனுப்பவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும். பாஜகவின் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்று திரண்டு நிற்கிறது. கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் பாஜகவின் அராஜகப்போக்கை கண்டித்தும் போராட்டம் நடத்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Rain Update: இந்த மாவட்டங்களுக்கு மழை உண்டு… வெளியான ஹேப்பி நியூஸ்!
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஸ்டாலினுக்கு மனமில்ஸலை: ராமதாஸ் குற்றச்சாட்டு!