ரூ.4 கோடி பறிமுதல்… “நயினார் வழக்கை விசாரிக்க முடியாது”: உயர்நீதிமன்றத்தில் ED!

Published On:

| By Selvam

நயினார் நாகேந்திரன் உதவியாளரிடமிருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது என்று அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 22) விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

“தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளரிடமிருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்று நெல்லை தொகுதி சுயேச்சை வேட்பாளர் ராகவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளை தொடர்ந்திருந்தார்.

இதில், தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரிய வழக்கை கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி வழக்கை முடித்துவைத்தது.

இந்தநிலையில், அமலாக்கத்துறை விசாரிக்ககோரிய வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில், “பணம் பறிமுதல் செய்யபட்டது தொடர்பாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவுகளின் பிரிவுகளை பார்க்கும் போது, இது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளின் படி குற்றமாக கருத முடியாது. எனினும் இதுதொடர்பாக பதிலளிக்க காலஅவகாசம் வழங்க வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க  உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்தநிலையில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கேட்டு நயினார் நாகேந்திரன் தரப்பில் அவருடைய வழக்கறிஞர் தாம்பரம் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சூர்யா-ஜோதிகாவிற்கு பெருமை சேர்த்த தேவ்… என்ன விஷயம் பாருங்க…!

‘டிடி நியூஸ்’… காவிமயமாக்க திட்டமா? – ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share