IPAC அலுவலகத்தில் ED ரெய்டு- அமித்ஷா வீடு முற்றுகை- திரிணாமுல் எம்.பிக்கள் குண்டு கட்டாக அகற்றம்!

Published On:

| By Mathi

TMC Protest

மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில், தேர்தல் வியூக வகுப்பு நிறுவனமான ஐபேக் I-PAC அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டை முற்றுகையிட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் குண்டு கட்டாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

பணமோசடி வழக்கில் கொல்கத்தாவில் ஐ-பேக் அலுவலகத்திலும், அதன் இணை நிறுவனர் பிரதீக் ஜெயின் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை நடந்துகொண்டிருந்த போது, முதல்வர் மம்தா பானர்ஜி பிரதீக் ஜெயின் வீட்டிற்குச் சென்று, அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ADVERTISEMENT

மேலும், இந்த சோதனைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்களைக் கைப்பற்றும் முயற்சி என்றும் மம்தா பானர்ஜி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது, மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் சாடினார்.

அதே நேரத்தில், மம்தா பானர்ஜி மற்றும் அவரது உதவியாளர்கள் விசாரணையைத் தடுத்ததாகவும், ஐ-பேக் அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை பலவந்தமாக எடுத்துச் சென்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இது விசாரணையைத் தடுத்த செயல் என்றும், சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையும், ஐ-பேக் நிறுவனமும் தற்போது கல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளன.

இதனிடையே டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டம் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களை பாதுகாப்பு படையினர் குண்டு கட்டாக அங்கிருந்து வெளியேற்றினர்.

ADVERTISEMENT

போராட்டம் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கீர்த்தி ஆசாத் கூறுகையில், அமலாகத்துறையின் சோதனைகள் சட்டவிரோதமானது. ஜனநாயக விரோதமானது என்றார். மஹூவா மொய்த்ரா எம்.பி. கூறுகையில், மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமலாக்கத்துறை எப்படி எல்லாம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பதை கொல்கத்தா சோதனைகள் வெளிப்படுத்தி இருக்கிறது என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share