டிஜிட்டல் திண்ணை: ஆபரேஷன் ‘வையண்ணா’… அதிமுகவுக்குள் E.D. ஆட்டம் ஆரம்பம்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ்சின் ஆதரவாளருமான வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தும்  செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன,

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது  மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே இருக்கும் தெலுங்கன்குடிகாடுதான் வைத்திலிங்கத்தின் சொந்த ஊர். தற்போது பெரிதாக கட்சிப் பணிகள் இல்லாததால், மாதத்தில் சில நாட்கள் சென்னையிலும் பல நாட்கள் தனது சொந்த ஊரிலும்தான் இருக்கிறார் வைத்திலிங்கம்.

ஊர்க்காரர்களும் டெல்டா வட்டார அதிமுக நிர்வாகிகளும் அவரை, ‘வையண்ணா’ என்றுதான் அழைக்கிறார்கள்.

இன்று காலை  ஒரத்தநாட்டில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தெலுங்கன்குடி காட்டில்  உள்ள  வைத்திலிங்கம் வீட்டுக்கு சென்றனர் அமலாக்கத்துறை அதிகாரிகள். அப்போது தொடங்கிய சோதனை இன்று இரவு வரை நீடிக்கிறது.

2011-16 ஆட்சிக் காலத்தில் சி.எம்.டி.ஏ. அமைச்சராக இருந்தபோது தனியார் கட்டுமான நிறுவனத்திடம் லஞ்சம் பெற்று சில அனுமதிகளை வழங்கியதாக, வைத்திலிங்கத்தின் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை இன்று வைத்திலிங்கம் வீட்டிலும், அவரது மகன்கள் வீட்டிலும், சென்னை எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் உள்ள அவரது அறையிலும், அந்த கோப்புகள் தொடர்பாக சென்னை சி.எம்.டி.ஏ. அலுவலகத்திலும் சோதனை நடத்தியுள்ளது.

2014 முதல் இப்போது வரை பாஜக ஆட்சியில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீது பாய்வதுதான் வழக்கமாக உள்ளது. ஆனால், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக ராமநாதபுரத்தில் நின்ற ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர் வைத்திலிங்கத்தை குறிவைத்து பாய்ந்திருக்கிறது அமலாக்கத்துறை.  ரெய்டு தொடங்கி 12 மணி நேரம் ஆகியும் கூட வைத்திலிங்கத்தின் தலைவரான ஓ.பன்னீர் செல்வம் இதுகுறித்து ஒரு கண்டனமோ, கருத்தோ கூட தெரிவிக்கவில்லை.

டெல்டா வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘கடந்த சில மாதங்களாக வையண்ணா அதிமுகவின் அனைத்து தரப்பையும் ஒன்று சேர்ப்பதில்  தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.  ஏற்கனவே டெல்டாவில் இருக்கும் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் தாங்கள்  அதிகாரப்பூர்வ அதிமுகவுக்கே செல்வதாக கூறியபோது அதுதான் சரி என்று அனுப்பி வைத்தவர்

கடந்த ஓரிரு மாதங்களில் நீலாங்கரையிலுள்ள சசிகலா உறவினர் ஒருவரின் பங்களாவில் அதிமுகவின் பல தரப்பினரையும் ஒன்று சேர்க்க சில விட்டுக் கொடுத்தல்களை  மேற்கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் சில முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார் வைத்திலிங்கம்.

உள்ளே வெளியே என இரு வகைகளிலும் அதிமுகவை ஒருங்கிணைக்க பாடுபட்டு வருகிறார். ஊடகங்களில் பேசும்போது கூட, ‘அதிமுக ஒருங்கிணைய வேண்டும்.  யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை.  எடப்பாடியும் வேண்டும், ஓபிஎஸ்சும் வேண்டும், டிடிவியும் வேண்டும், சின்னம்மாவும் வேண்டும். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, 2025 டிசம்பருக்குள் இதெல்லாம் நடக்கும், எழுதி வச்சிக்கங்க… 2026 இல் அதிமுக ஆட்சிதான்’ என்று அடித்துப் பேசிவந்தார் வைத்திலிங்கம்.

இந்த நிலையில்தான் பாஜகவுக்கு நெருக்கமான ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கத்தை நோக்கி  அமலாக்கத்துறை பாய்ந்திருக்கிறது. இந்த ரெய்டுக்கு சட்ட ரீதியான காரணங்களை விட அரசியல் காரணங்களே அதிகம்’  என்கிறார்கள் டெல்டா அதிமுகவினர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

துருக்கியில் பயங்கரவாத தாக்குதல்… மூன்று பேர் பலியான சோகம்!

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் விஜிலென்ஸ் அதிரடி ரெய்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share