பணமோசடி புகாரின் அடிப்படையில் அனில் அம்பானிக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை இன்று (ஜூலை 24)சோதனை நடத்தி வருகிறது. ED raids 40 places owned by Anil Ambani!
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு 2017 முதல் 2019 வரை யெஸ் (YES) வங்கியிலிருந்து பெறப்பட்ட ரூ.3,000 கோடி கடன்களை சட்டவிரோதமாக வங்கியின் விளம்பரதாரர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு நிதி மாற்றப்பட்டதாக அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது.
2017–18 நிதியாண்டில் ரூ.3,742.60 கோடியாக இருந்த ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL) நிறுவனக் கடன் வழங்கல், 2018–19 நிதியாண்டில் ரூ.8,670.80 கோடியாக உயர்ந்திருப்பதையும் கண்டறிந்துள்ளது.
இதற்கிடையே சுமார் ரூ.2,200 கோடி கடனை திரும்ப செலுத்தாதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதலின்படி, கடந்த மாதம் ஜூன் 13ஆம் தேதி அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) நிறுவனத்தை ‘மோசடி’ என்று SBI வங்கி அறிவித்தது. இதனை நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் நேற்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக மும்பை மற்றும் டெல்லியில் உள்ள அவருக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தேசிய வீட்டுவசதி வங்கி, இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), தேசிய நிதி அறிக்கை ஆணையம் (NFRA), பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பல ஒழுங்குமுறை மற்றும் நிதி அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரை மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) தாக்கல் செய்த இரண்டு FIRகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் அமலாக்கத்துறை இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளது.
ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமம் (RAAGA) நிறுவனங்களால் பணமோசடி நடந்துள்ளதாகவும், சோதனையின் ஒரு பகுதியாக அனில் அம்பானியின் குழுவுடன் தொடர்புடைய மூத்த வணிக நிர்வாகிகள் தேடப்படுகிறார்கள் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அமலாக்கத்துறை தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
