கேரளா மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட்- CMRL -க்கு சுரங்க அனுமதி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றது என்பது குற்றச்சாட்டு. முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணாவின் எக்ஸாலாஜிக் என்ற நிறுவனத்துக்கு இதில் தொடர்பு உள்ளது என்பதும் குற்றச்சாட்டு.
இவ்வழக்கின் அமலாக்கத்துறை விசாரணையை ரத்து செய்ய கோரி CMRL நிறுவனம் தொடர்ந்த மனுவை கேரளா உயர்நீதிமன்றம் நேற்று மார்ச் 26-ந் தேதி ரத்து செய்தது.
இதனையடுத்து இன்று மே 27-ந் தேதி முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பினராயி விஜயன் மருமகனான முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் முகமது ரியாஸ் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அமலாக்கத்துறையின் இந்த சோதனைகளுக்கு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், முன்னாள் கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயனை குறிவைத்து நடத்தப்படும் அமலாக்கத் துறை (ED) சோதனைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இத்தகைய நடவடிக்கைகள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய ஏஜென்சிகளை ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்து வருவது குறித்த தீவிர கவலைகளை மீண்டும் ஒருமுறை எழுப்புகின்றன.
அதே வேளையில், பினராயி விஜயன் ஏன் “இதுவரை பா.ஜ.க-வால் குறிவைக்கப்படவில்லை” என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த சில காங்கிரஸ் தலைவர்களின் பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளின் போலித்தனத்தையும் இது அம்பலப்படுத்துகிறது”என தெரிவித்துள்ளார்.










