உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று (ஜூலை 17) காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூன் 13ஆம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தி அன்றே கைது செய்தது. நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பிறகு செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு ஜூலை 14ஆம் தேதி அனுமதி வழங்கியது.
இதனிடையே பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘அடுத்தது கேட்டை திறந்து வைக்க வேண்டியது கே.என்.நேருவும், பொன்முடியும் தான்’ என்று கூறியிருந்தார்.
இந்தசூழலில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட ஒரு மாதம் நான்கு நாட்களுக்கு பிறகு இன்று (ஜூலை 17) மற்றொரு அமைச்சரான உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் பின்புறத்தில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டில் காலை 7 மணி முதல் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.
அதுபோன்று விழுப்புரத்தில் சண்முகபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டுக்கும் 6 அமலாக்கத் துறை அதிகாரிகள் இரண்டு காரில் சென்றனர். அமலாக்கத் துறை அதிகாரிகள் வீட்டின் கேட்டை தட்டிய போது, ‘வீட்டில் யாரும் இல்லை, அமைச்சர் குடும்பத்தோடு சென்னையில் இருக்கிறார்’ என்று பொன்முடியின் மனைவி விசாலாட்சியின் ஓட்டுநர் செல்வம் கூறியிருக்கிறார்.
அப்போது ஓட்டுநர் செல்வத்திடம் அமைச்சருக்கு தொடர்புகொண்டு, ’அமலாக்கத் துறை வந்திருக்கிறது’ என்று சொல்லுங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
அதன்பேரில் செல்வம் சென்னைக்கு தொடர்பு கொண்ட போது அமைச்சர் செல்போனை எடுக்கவில்லை. சென்னையில் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வரும் அதிகாரிகள் பொன்முடி செல்போனையும், குடும்பத்தினர் செல்போனையும் பறிமுதல் செய்து வைத்திருப்பதால் அழைப்பை ஏற்கமுடியவில்லை.
இந்நிலையில் விழுப்புரத்தில் இருந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்னையில் இருக்கும் அதிகாரிகளுக்கு தொடர்புகொண்டு பேசியிருக்கின்றனர். அதன்பிறகு அமலாக்கத் துறை அனுமதியோடு பொன்முடி, ஓட்டுநர் செல்வத்திடம் செல்போன் மூலம் பேசி, சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வீட்டை திறந்துவிட சொல்லியிருக்கிறார். அதன்படி காலை 8.30 முதல் ED அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
விழுப்புரம் வீட்டில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விழுப்புரத்தில் உள்ள கயல்பொன்னி ஏஜென்சிக்கு இரண்டு அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விக்கிரவாண்டியில் உள்ள அவருக்கு சொந்தமான சூர்யா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பொன்முடி வீட்டில் இருந்த காரில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியதில் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனையின் எதிரொலியாக தலைமைச் செயலகத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறையில் கடந்த மாதம் சோதனை நடத்தியது போன்று இந்த முறையும் சோதனை நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி எம்.பியும், பொன்முடி மகனுமான கவுதம் சிகாமணிக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
முன்னதாக, 2008ஆம் ஆண்டு இந்தோனேசிய தலைநகரான ஜகார்த்தாவில் செயல்படும் தனியார் நிறுவனத்தின் 2.45 லட்சம் பங்குகளை கவுதம் சிகாமணி 1 லட்சம் அமெரிக்க டாலரை முதலீடு செய்து வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த நிறுவனத்தில் 55 ஆயிரம் டாலர் முதலீடு செய்ததாகவும் புகார் எழுந்தது. இந்த சூழலில் விதிமுறைகளை மீறி வெளிநாடுகளில் முதலீடு செய்து சம்பாதித்ததாக கவுதம் சிகாமணிக்கு சொந்தமான ரூ.8.6 கோடி மதிப்புள்ள நிலம், வணிக கட்டிடம்,வீடு, வங்கிக் கணக்கு ஆகியவற்றை அமலாக்கத் துறை 2020 அக்டோபர் 16ஆம் தேதி ‘பெமா’ சட்டத்தின் கீழ் முடக்கியது.
அதுபோன்று 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததால் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக 2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்தசூழலில் அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகிறது அமலாக்கத் துறை.
- ஏற்கனவே 2001ல் சென்னை சைதாப்பேட்டை ஶ்ரீநகர் வடக்கு காலனியில் அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில் அவரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
அதுபோன்று வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை பொன்முடி மீதும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் 2006 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து இருவரையும் வேலூர் நீதிமன்றம் விடுவித்தது.
இந்தசூழலில் தான் இரு வழக்கில் இருந்து அமைச்சர் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கையும் பொன்முடி சட்ட ரீதியாக எதிர்கொள்வார் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு புறப்பட்டிருக்கும் இந்த சூழலில் சோதனை நடந்து வருவதால், ‘இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் செயல்’ என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
பிரியா
திமுக அமைச்சர்கள் பாகுபாடின்றி கலெக்சன், கரப்சனில் ஈடுபடுகின்றனர்: செல்லூர் ராஜு
திமுகவை மிரட்ட வேண்டும் என்ற எண்ணம் வெற்றி பெறாது: கே.பாலகிருஷ்ணன்