டாஸ்மாக் சோதனைகளுக்கு இடையே தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மே 16) சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ed raid at simbu dhanush sk film-producer akash baskaran house
சென்னை: தமிழ் திரையுலகில் சமீப காலமாக மிக முக்கியமான தயாரிப்பாளராக இருந்து வரும் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
தமிழ்நாடு டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து விசாகன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சென்னையின் பல்வேறு இடங்களிலும் காலை முதல் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழ்திரையுலகில் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வரும் ‘DAWN PICTURES’ தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது கவனம் பெற்றுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் அவரது வீட்டிலும் மற்ற இடங்களிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
எதன் அடிப்படையில் சோதனை நடத்தப்படுகிறது என்பது குறித்து இதுவரை அமலாக்கதுறை தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் அன்பில் மகேஷின் நெருங்கிய உறவினர் தான் இந்த ஆகாஸ் பாஸ்கரன்.
இவர் சினிமாவில் உதவி இயக்குநராக சில படங்களில் பணியாற்றி பின்பு ‘DAWN PICTURES’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.
அதன் முதல் படமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனுஷின் 52வது படமான ’இட்லி கடை’ தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது.
அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் அந்நிறுவனத்தில் இருந்து பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வந்தன.

அதன்படி இரண்டாவது படமாக சுதா கொங்கரா – சிவகார்த்திகேயன் – ஜெயம்ரவி – அதர்வா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பராசக்தி’ படத்தை தயாரித்து வருகிறார்.

மேலும் அதர்வா – கயாடு லோஹரை வைத்து ‘இதயம் முரளி’ என்கிற படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.
அதனையடுத்து சமீபத்தில் பூஜை நடைபெற்ற சிம்புவின் 49வது படத்தையும் தயாரிப்பதாக அறிவித்து பரபரப்பை கிளப்பினார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திருமணம்!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆகாஷ் பாஸ்கரன் – தாரணி திருமணத்தை முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் இருவரும் முன் நின்று நடத்தி வைத்தனர்.
தாரணி ’கவின்கேர்’ குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மூன்றாவது மகள் ஆவார்.

இவர்களது திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் உள்ளிட்டோருடன், சிம்பு தனுஷ், நயன்தாரா, அனிருத், சிவகார்த்திகேயன், அட்லி, தமிழரசன் பச்சமுத்து, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தொடர்ந்து அதிக பட்ஜெட் மற்றும் பெரிய ஹீரோக்களின் படங்களை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் மத்திய அரசின் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது திரையுலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
