சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 7) இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ED conducts raid tasmac
கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களான சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக், கொங்கு மெஸ் உரிமையாளர் மணி, அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆகிய மூன்று பேர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (மார்ச் 6) சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான தயாரிப்பு நிறுவனங்களான அக்கார்டு, SNJ நிறுவனங்கள், மண்ணடியில் உள்ள எஸ்டிபிஐ அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அமலாக்கத்துறையின் இந்த திடீர் சோதனை அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. நேற்று இரவு முழுவதும் விடிய விடிய டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிலவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாக தெரிகிறது.
இந்தநிலையில், இன்று இரண்டாவது நாளாக டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, பாண்டிபஜாரில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ACCORD DISTILLERS & BREWERS PRIVATE LIMITED, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள எஸ்என்ஜே நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிஐஎஸ்எஃப் விழாவில் இன்று பங்கேற்றுள்ள நிலையில், அமலாக்கத்துறை சோதனை அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ED conducts raid tasmac
